TamilSaaga

எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள “தலைவி” படம்.. எப்படி இருக்கு? – ஓர் அலசல்


சட்டமன்ற வரலாற்றின் கருப்பு தினமாக சொல்லப்பட்ட நிகழ்வுடன் தொடங்கும் படத்தில் மீண்டும் முதல்வராக தான் கோட்டைக்கு வருவேன் என்ற ஜெயலலிதாவின் சபதம் ஓர் புரட்சித் துவக்கம். தாய்க்காக நடிகையாகி திரையில் தோன்றி திறமையால் கோலோச்சும் காட்சிகள் சிறப்பு.

திரையில் எம்.ஜி.ஆர் – ஜெ வின் ஜோடி மக்களால் எந்த அளவு ரசிக்கப்பட்டது என்பதை காட்டும் காட்சிகள் கூடுதல் ப்ளஸ். படத்தின் பெரும்பகுதிகள் இருவரின் அன்பு, உணர்வு மற்றும் உறவை இழிவாக பேசி வருபவர்களுக்கு இது மனிதரின் இயல்பு அன்பு உணர்வுகள் என்பதை அழகாய் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ஏ.எல் விஜய்.

தாயின் விருப்பத்திற்காக சினிமா, தலைவரின் விருபத்திற்காக அரசியல் என மற்றவர் முடிவால் அத்யாயத்தை தொடங்கினாலும் சுய திறமை, தைரியம் மற்றும் ஆற்றலால் தொட்ட இடமெல்லாம் துளங்க, வெற்றி கொடி நாட்டுகின்றார். மற்றவரால் பெண் என ஒடுக்கப்படுவது, அரசியல் சூழ்ச்சி ஆகியன ஜெயலலிதாவின் வெற்றிப் படிகள்.

“மக்களை நீ நேசித்தால் மக்கள் உன்னை நேசிப்பார்கள்” என்ற தாரகத்தை கொண்டு சத்துணவு திட்டம் சீரமைப்பு, மக்கள் பணி, கட்சிப்பணி நாடாளுமன்ற அண்ணாவின் இருக்கையில் அமர்ந்து அரங்கம் அதிரும் ஆங்கிலத்தில் கர்ஜிக்கும் காட்சிகள் வேற லெவல்.

எம்.ஜி.ஆர் இறப்பில் அருகில் நிற்பதும் பெண் என துச்சமாக ஆண்கள் அவரை துன்புறுத்தி ஒடுக்குவதும், வேனில் இருந்து கீழே தள்ளி மாபெரும் விருட்சத்திற்கு மண்ணில் விதையென ஜெயலலிதா விழுவதும் இந்த பெண் வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொதிக்கச் செய்கிறது.

பெண் என ஒடுக்கப்பட்டு ஜெ-வை டெல்லிக்கு அனுப்பி தோற்கடிக்க எண்ணியவர்ளுக்கு இந்திராவுடன் கூட்டணியை இறுதி செய்து “ஆண்களால் செய்ய முடியாததை பெண் நான் செய்து முடித்துள்ளேன்” என காட்டும் காட்சிகளுக்கு ஒரு விசில். ஜெயலலிதாவின் ஆளுமை திறமையை கண்ணுக்குள் காட்டும் காட்சியமைப்புகள் பலம்.

தேர்தலில் வென்று ஆட்சியமைத்து “ஜெ.ஜெயலலிதா எனும் நான்” என்ற சிம்மத்தின் கர்ஜனை பெண்ணுக்கு ஆண்களும் சல்யூட் அடிக்கும் ஓர் வெற்றி. அமைச்சர்கள் குனிந்து கும்பிடு போடுவது அடிமைத்தனம் என்று பேசுபவர்களுக்காக பெண் என மட்டம் தட்டும் ஆண்களை வெற்றியால் வணங்க வைத்ததை காட்சிகள் கூறுகின்றன.

இது அடிமைத்தனம் அல்ல ஒடுக்கப்பட்ட ஒருவர் ஆளுமைக்கு வந்தால் தானாக தலைவணங்க நேரிடும் எனவே பெண்ணை துச்சமென எண்ணாதே எனும் எச்சரிக்கையாகவே இறுதிக்காட்சி மிரட்டுகிறது. பாடல்கள் சுமார், ஏற்ற இறக்கம் இல்லாத சுமூகமான திரைக்கதை முதல் பாதி சிறிது தோய்வு மற்றும் எம்.ஜி.ஆரை ஆரம்ப காட்சிகளில் ஜெயலலிதா அவமதிப்பது போன்ற காட்சிகள் நெருடலை ஏற்படுத்துகிறது.

தன் வெற்றிகளை இந்த ஆணாதிக்க சமூகத்தில் தனது அரணாய் அமைத்து அதன் மேல் சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி சக்கரத்தை ஆளுமையாய் ஆண்ட புரட்சித் தலைவி! பெண் என்றால் துச்சமல்ல ஆணுக்கும் அவர் ஓர் முன்மாதிரி. அம்மா எனும் ஆளுமை அவரின் வெற்றி ஒட்டுமொத்த பெண்களுக்கான வெற்றி என்பதை படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் அருமையாக பொருந்துகிறார். எம்.ஜி.ஆர் வடிவத்தில் நடிகர் அரவிந்த் சாமி அச்சு அசலாக நகலெடுத்தது போல் இருப்பதும் படத்தின் மிக முக்கிய அம்சமாகும். மொத்தத்தில் தலைவி வென்றுள்ளார்.

Related posts