சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கான Booster shot தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் வேண்டுகோள் படி, பொதுமக்கள் இந்த பூஸ்டர்களை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் Booster shot செலுத்திக் கொள்ள சென்ற Sora Ma எனும் பெண்ணுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு ஒரு நர்ஸாக வந்து பூஸ்டர் செலுத்தியது யார் தெரியுமா?
நமது சிங்கப்பூரின் Mediacorp நடிகை எலிசபெத் லீ. இதை சற்றும் எதிர்பார்க்காத Sora Ma மகிழ்ச்சியில் கத்தி எகிறியே குதித்துவிட்டார். அத்தனை ஆச்சர்யம்!.

“என்னால் இன்னமும் இதனை நம்பமுடியவில்லை” என்று Sora Ma தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எலிசபெத் லீ ஒரு பிரபலமான நடிகை மட்டும் அல்ல. அவர் ஒரு செவிலியரும் கூட. இந்த பணியை அவர் விரும்பி செய்கிறார். அதனால் தான், இவருக்கு இத்தனை ரசிகர் பட்டாளம்.
இதுகுறித்து பகிர்ந்துள்ள Sora Ma, “நடிகையாக இருந்தாலும், செவிலியராக வந்து பணியாற்றியதற்கு நன்றி, இது நிச்சயமாக சிறந்த (தடுப்பூசி) அனுபவங்களில் ஒன்றாகும். அவர் ஒரு நல்ல நடிகை மட்டுமல்ல, ஒரு தொழில்முறை செவிலியரும் கூட,” என்று குறிப்பிட்டுள்ளார்.

NUS நர்சிங் ஹானர்ஸ் பட்டதாரியான நடிகை லீ எவ்வளவு காலம் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார் தெரியுமா?
இதுகுறித்து அவர் 8days.sg தளத்துக்கு அளித்த பேட்டியில், ஜூன் 2020 முதல் COVID-19 தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக லீ கூறினார். மேலும் கடந்த எட்டு மாதங்களாக, மத்திய சிங்கப்பூரில் உள்ள தடுப்பூசி மையத்தில் அவர் செவிலியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
“தடுப்பூசி மையங்கள் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கத் தொடங்கின. ஆனால் அந்த நேரத்தில் நான் Live Your Dreams படப்பிடிப்பில் இருந்தேன், அதனால் என்னால் உதவவே முடியவில்லை. படப்பிடிப்பை முடித்த பிறகு உடனடியாக இந்த பணிக்கு வந்துவிட்டேன்” என்று சொல்லும் நடிகை லீ நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
சரி.. ஒரு நடிகைக்கு என்னதான் சமூக சேவை என்ன இருந்தாலும், களத்தில் இறங்கி.. அதுவும் இப்படி ஷூட்டிங் இல்லாத நேரத்தில் முழு நேர நர்ஸாக மக்களுக்காக பணியாற்றும் அளவுக்கு அவரால் எப்படி செயல்பட முடிகிறது என்று பார்த்தால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
ஆம்! நடிகை லீயின் மூத்த மற்றும் இளைய சகோதரிகள் மற்றும் அவரது மைத்துனர் என அனைவரும் மருத்துவர்கள். இவர் மட்டும் தான் நடிகை. அதனால் தான், நானும் தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணியதாக கூறுகிறார்.
நடிகை லீயின் ஒவ்வொரு ஷிப்டும் 12 முதல் 14 மணிநேரம் வரை நீடிக்கும், கால அட்டவணையின் அடிப்படையில் அவரது ஷிப்ட்கள் வாரந்தோறும் பட்டியலிடப்படுகின்றன. சில சமயங்களில் ஒரே நாளில் “2,500 பேருக்கு” தடுப்பூசி போட்டதாகக் கூட லீ குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கூறும் நடிகை லீ, “என்னால் தடுப்பூசி போடப்பட்டதை பெருமையாக கருதுவதாக சிலர் கூறுகிறார்கள். சிலர் என்னிடம், ‘நீங்கள் ‘தடுப்பூசி’ செலுத்த பயிற்சி பெற்றவரா?’ என்று கேட்பார்கள். ஒரு நடிகை என்பதைத் தவிர, நான் ஒரு செவிலியர் என்பதையும் இந்த இடத்தில் நான் அனைவருக்கும் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் எலிசபெத் ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியர் என்பது கூடுதல் தகவல். 2012-ல் வெளியான Imperfect தான் இவரது முதல் திரைப்படம்.
நவீன நடனம், சீன நடனம், சியர்லீடிங் மற்றும் இசை (பியானோ மற்றும் குஷெங் வாசிப்பது) முதல் நாடகம் வரையிலான கலைநிகழ்ச்சிகளில் அவர் முழுமையாக ரசித்து, தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். கலை நிகழ்ச்சிகளைத் தவிர, அவர் தனது 10 வயதில் Wushu-ல் Black Belt வாங்கியிருக்கிறார்.

2013 முதல் 2017 வரை, எலிசபெத் நர்சிங்கில் இளங்கலைப் பட்டப்படிப்புக்காக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அதுதவிர, தனது ஓய்வு நேரத்தில் நர்சிங் பயிற்சி மற்றும் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்த நர்சிங் ஆராய்ச்சி செய்து வருகிறார். பின்தங்கிய மற்றும் ஏழை மக்களுக்கு உதவுவதில் ஆர்வமுள்ள எலிசபெத், இந்தோனேசியா மற்றும் நேபாளத்திற்கான மருத்துவப் பயணங்களில் தன்னார்வத் தொண்டு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில், வேறு எவரும் பிஸியான நடிகையாகவும், மற்றொரு புறம் அதைவிட பிஸியான செவிலியராகவும் பணிபுரிவதாக தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், நடிப்பு + அக்மார்க் சமூக சேவை செய்யும் முதல் நடிகை சிங்கப்பூரின் எலிசபெத் லீ-யாகத் தான் இருக்க முடியும். இவரை மகளாக பெற்றதற்கு பெருமை கொள்கிறது நமது சிங்கப்பூர்!.