TamilSaaga

“MADRID சர்வதேச திரைப்பட விழா” : நடிகை மஹிமா நம்பியாருக்கு விருது – எந்த படத்திற்காக தெரியுமா?

பிரபல நடிகர் அருள்நிதியின் நடிப்பில் வெளியான மௌனகுரு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக களமிறங்கியவர் தான் சாந்தகுமார். மௌனகுரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்பட்டது. வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை கொண்டுசென்ற சாந்தகுமார் அவர்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அவர் பிரபல நடிகர் ஆர்யாவை கொண்டு உருவாக்கிய அடுத்த திரைப்படம் தான் மகாமுனி. இந்த திரைப்படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இன்றளவும் பல சர்வதேச விருதுகளை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடந்த “MADRID” என்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் விருதுகளை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகை மஹிமா நம்பியார் சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கார்யஸ்தன் என்ற படத்தின் மூலம் மஹிமா திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு சாட்டை, குற்றம் 23, கொடிவீரன் மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.

தற்போது இரண்டு தமிழ் படங்கள் மற்றும் 1 மலையாள படத்தில் மஹிமா நடித்து வருகின்றார். இந்நிலையில் தனக்கு விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்கி அளிக்கிறது என்றும். மேலும் ஸ்டுடியோ கிறீன் நிறுவனத்திற்கும், இயக்குநர் சாந்தகுமார், நடிகர் ஆர்யா மற்றும் நடிகை இந்துஜா ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Related posts