பிரபல நிகழ்ச்சியான BigBoss மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு மூளையில் ஒரு பகுதியில் திரவக்கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த ஒரு சமூகவலைதள பதிவில் தனது மூளையின் ஒரு பகுதியில் துளை ஒன்று உள்ளதாகவும் அதனால் திரவக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனை மறுசீரமைக்க அறுவை சிகிச்சை விரைவில் செய்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் பொதுமக்கள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் தனது யூடியூப் சேனல் சார்ந்து எழுந்த சலசலப்புகளை கூட மிகத் தைரியமாக எதிர்கொண்ட அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு உடல்நலப் பிரச்சனை என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு எதிராக பேசியவர்கள் கூட தற்போது அவர் குணமாக விரும்புவதாக பதிவிட்டு வருகிறார்கள்.
அர்ச்சனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நோயானது Cerebrospinal fluid leak (CSF Leak) என கூறப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஆகியன சாதாரண அறிகுறிகளாக இருக்கும். மேலும் Photo Phobia எனப்படும் வெளிச்சத்தை காணும் போது கண்கள் கூசும் நிலையும் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் மூக்கு காது போன்றவற்றில் திரவம் கசிய வாய்ப்புள்ளது. அதனை சோதனை செய்யும்போது நோய் இருப்பதை அறியலாம்.
பிரச்சனை சிறிய அளவில் இருப்பவர்களுக்கு சில நாட்கள் ஓய்வு எடுத்தாலே குணமாகிவிடும். துளை பெரிய அளவில் இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து இதனை குணப்படுத்தலாம்.
அர்ச்சனா சரியான காலத்தில் மருத்துவ சிகிச்சைக்கு சேர்ந்துவிட்டதால் பெரிய அளவிலான சிக்கல் ஏதுமில்லாமல் குணமாக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.