TamilSaaga

“சிங்கப்பூர் Prince George’s Park Residences” : உயரத்தில் இருந்து விழுந்து மாணவர் பலி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) வளாகத்தில் உள்ள இளவரசர் ஜார்ஜ் பார்க் குடியிருப்பில் (PGPR) உயரத்தில் இருந்து கீழே விழுந்து 19 வயது மாணவர் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதர்ஷிப் வெளியிட்ட தகவல்படி, கீழே விழுந்த அந்த மாணவர் கடந்த அக்டோபர் 14ம் தேதி காலை, ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அக்டோபர் 16ம் தேதி NUS மாணவர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் காவல்துறை (SPF) மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) ஆகிய இரண்டு துறைகளும் மாணவர் கீழே விழுந்த செய்தி கிடைத்த சிறுது நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்றதாக வெளியான அந்த தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது. மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, SCDF வெளியிட்ட தகவலில், கடந்த அக்டோபர் 14ம் தேதி அதிகாலை 3:05 மணிக்கு உதவிக்கான அழைப்பைப் பெற்றதாகவும், அந்த மாணவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) அனுப்பப்பட்டதாகவும் கூறினார்கள்.

சம்பவ இடத்தில் 19 வயது இளைஞர் சுயநினைவின்றி காணப்பட்டார் என்றும் மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில், அந்த பல்கலைக்கழகம் இறந்த அந்த மாணவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் தொடர்புகொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்வு குறித்து ஒரு மாணவர் பேசியபோது “பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் நீண்ட நாட்களாக வீட்டை விட்டு தனித்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பல்கலைக்கழகம் அல்லது பிஜிபி நிர்வாகம் வளாகத்தில் வசிப்பவர்களைப் பராமரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என்று அவர் கூறினார். இறந்த அந்த மாணவர் வெளிநாட்டு மாணவரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts