TamilSaaga

சிங்கப்பூரில் தவறுதலாக அளவு குறைத்து போடப்பட்ட தடுப்பூசி – சிங்ஹெல்த் விளக்கம்

சிங்கப்பூர் புக்கிட் மேரா பாலிகிளினிக்கில் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்குத் தவறுதலாக குறைந்த அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக பாலிகிளினிக்கை இயக்கும் சிங்ஹெல்த் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) (அக் 24) தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 22 வரை தடுப்பூசி பெற்ற 111 நோயாளிகள் மற்றும் ஆறு ஊழியர்களைப் பாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்தின் 10 சதவிகித அளவிலிருந்து மிகக் குறைவான அளவை பெற்றனர் என்று சிங்ஹெல்த் ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

“கிளினிக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சிரிஞ்சில் சரியான அடையாளங்களை காண்பதில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது” என்று சுகாதார குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் கண்டறியப்பட்ட பிறகு, பிழையின் அளவைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சென்றடையவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று சிங்ஹெல்த் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களுக்கு சீக்கிரம் சிங்ஹெல்த் பாலி கிளினிக்கில் “முழு மாற்று டோஸ்” தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

“சுகாதார அமைச்சின் தற்போதைய தடுப்பூசி வழிகாட்டுதல்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் முதலில் போடப்பட்ட குறைவான டோஸ் எந்தவிதமான பாதகமான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று உறுதியளிக்க விரும்புகிறோம், மேலும் அவர்கள் கோவிட் -19 தடுப்பூசியை மாற்றுவது மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது” சிங்ஹெல்த் கூறியுள்ளது.

Related posts