மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. எனினும், சில நேரங்களில் இவை தவிர்க்க முடியாத துயரச் சம்பவங்களாக மாறுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் தற்போது குவைத் நாட்டில் நடந்துள்ளது.
குவைத் நாட்டில் மூன்று பேர் தீப்புகையினால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இருவரும் அடங்குவர். மேலும், மற்றொரு கொல்கத்தாவைச் சேர்ந்தவர். குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வந்த இவர்கள், உரிமையாளர்கள் வழங்கிய அறையில் தங்கி வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் நாட்டில் தற்போது மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது, வெப்பநிலை 5-6 டிகிரிக்கு குறையக்கூடும்.
நேற்று முன்தினம் இரவு, குவைத்தில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால், தங்களது அறைக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர். பின்னர், குளிர் அதிகமாக இருந்ததால், தீயை அறையின் உள்ளேயே கொண்டு வந்துள்ளனர். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த அவர்கள், தங்களை அறியாமல் தூங்கிவிட்டனர். முதலில் 3 பேர் குளிர் காய்ந்த நிலையில், கொஞ்ச நேரத்தில் 4வது நபரும் அங்கே வந்து தூங்கிவிட்டார். அறையில் இருந்த ஆக்ஸிஜன் குறைந்து, மூச்சுத்திணறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் மட்டும் உயிருக்கு போராடியுள்ளார். உயிருக்கு போராடிய அந்த நபர் ஹெலிகாப்டரில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்தியத் தூதரகம் சார்பில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உறவினர்கள், உடல்களை பாதுகாப்பாக இந்தியா கொண்டுவர அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவித்து வருவதால், விரைவில் உடல்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.