கெவின், சிங்கப்பூரைச் சார்ந்த ஒரு நபர். இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். தினம்தோறும் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு குழந்தையைப் பார்க்க நேரமில்லாததால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள 29 வயதான ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
இந்தப் பெண் இதற்கு முன் பல இடங்களில் இது போன்று பணிபுரிந்திருக்கிறார். எந்த பிரச்னையும் இல்லாததால் நம்பிக்கையுடன் பணிக்கு அமர்த்தப்பட்டார். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல் ஜூலை 1-ம் தேதி வேலைக்கு சென்று திரும்பியுள்ளார் கெவின்! அப்பொழுது தான் குழந்தையின் உடம்பில் சில காயங்களை கவனித்துள்ளார்.
உடனே வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும்பொழுது குழந்தை விளையாடும் பொழுது தவறி விழுந்ததாக கூறியுள்ளார் அந்தப் பெண். இருப்பினும் சந்தேகப்பட்ட கெவின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராவைப் பார்க்கும்பொழுது தான் அந்தப் பெண்ணின் அரக்க குணம் தெரிந்துள்ளது.
குழந்தையை சரமாரியாக அந்தப் பெண் தாக்கியுள்ளார். வீடியோ பதிவில், குழந்தைக்கு அந்தப் பெண் உணவு அளித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாத குழந்தை அந்த உணவை சாப்பிட மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் குழந்தையைத் தாக்கியுள்ளார் மேலும் குழந்தையின் டேபிள் மீதும் மூன்று முறை அடித்துள்ளார். இப்படி அரக்கி போல் நடந்துகொண்ட அவர் உடனே சமயலறைக்கு சென்று எதையோ எடுத்து வந்து மீண்டும் குழந்தைக்கு கொடுத்துள்ளார். அடித்த பொழுது குழந்தையின் பல் பட்டு உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சர்க்கரையை த் தான் சமயலறையில் இருந்து எடுத்து வந்து அந்த காயத்தின் மீது தடவியுள்ளார். இது பல காலமாய் கெவின் வீட்டில் கொண்டிருந்த பழக்கமாம்.
இந்தப் பதிவைத் தான் கெவின் பார்த்துள்ளார். இதனைக் கண்டு கலக்கமடைந்த அவர் இதனை போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார் அந்த நேரம் நள்ளிரவு என்பதால் காலை வரை காத்திருந்து அந்தப் பெண்ணின் மேல் புகார் அளித்துள்ளார். உடனே அந்தப் பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தங்கள் குழந்தைக்கு நடந்ததை நம்ப முடியாத பெற்றோர் அந்த பெண்ணின் பின்புலம் குறித்து விசாரிக்கையில் இது போல் நடப்பது புதிதல்ல என்பது தெரியவந்துள்ளது. இது போல் குழந்தைகளைப் பராமரிக்க வேலையாட்களை அமர்த்தும் பொழுது பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். அவர்களின் பின்புலங்களைக் குறித்து தீர விசாரித்து, முன் பணிபுரிந்த வீடுகளில் அவர்களைக் குறித்த கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே வேலைக்கு எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு பின் தங்கள் குழந்தையை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த பிறகு அதிர்ஷ்டவசமாக மேல் காயங்கள் தவிர குழந்தையின் உடலுக்கு எந்த பிரச்னையுமில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனாலும் இந்த சம்பவத்தால் குழந்தை மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன குழந்தை இரவில் திடீரென கண்விழித்து அழுவதாகவும், முடியைப் பிடித்துக் கொண்டு தன்னைத் தானே சுவற்றில், கதவில் இடித்துக் கொள்வதாகவும் கெவின் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் இந்த பயத்தை நீக்குவதே இவர்களின் முதல் கடமை எனவும், இதற்குமேல் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரையும் பணியமர்த்தப் போவதில்லை, தங்கள் குடும்பத்தினர் உதவியுடன் இனி நாங்களே குழந்தையைப் பராமரிப்போம் எனவும் கெவின் தெரிவித்தார்.
மேலும் குழந்தைக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பின் காரணமாக பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். தங்கள் குழந்தையை இது போன்ற தவறான கைகளில் ஒப்படைத்ததைக் குறித்து தங்களைத் தாங்களே குற்றப்படுத்திக்கொண்ட அவர்கள் இனி தங்கள் குழந்தையை மிகுந்த கவனமுடன் பார்த்துக்கொள்ள போவதாகக் கூறினர்.