TamilSaaga

தாயின் மரணப் படுக்கை… விமான டிக்கெட் கிடைக்காமல் சாங்கி MRT ஸ்டேஷனில் அழுது கொண்டிருந்த நபர் – கடைசி வரை கூட இருந்து உதவிய இரு தமிழக ஊழியர்கள்

கோவிட் நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், சாங்கி விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நேற்று (அக்.26) விருது வழங்கப்பட்டது.

சேவை மனப்பான்மையுடன் வேலை செய்த ஊழியர்களை ஊக்கமளிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விருது வென்றவர்கள் $1,500 மற்றும் $15,000 மதிப்புள்ள வவுச்சர்களைப் பெற்றனர்.

இதில், குறிப்பிடத்தக்க விருதினை ஆண்டியப்பன் வேலு ஹேமலதா மற்றும் மற்றொரு ஊழியரான அபிராமி பொற்ச்செழியன் ஆகியோர் வென்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு… அதாவது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், ஜூலை 28ம் தேதி, இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், சொந்த ஊரில் மோசமான உடல்நிலையில் இருந்த தாயை பார்க்க விமானம் கிடைக்காத விரக்தியில், சாங்கி MRT ரயில் நிலையத்தில் அழுது கொண்டிருந்தார்.

இதனை கண்ட 37 வயதான திருமதி ஹேமலதா, அவரிடம் பேசிய போது, கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு விமானத்தில் பயணிக்க டிக்கெட் கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து அவரை உடனே சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி, அந்த நபரும் தூதரக அதிகாரிகளிடம் பேச, அவருக்கு இந்தியா செல்ல அனுமதி கிடைத்தது.

எனினும், ஜூலை 30 அன்று, அனைத்து விமானங்களும் நிரம்பிவிட்டன. டிக்கெட் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலைய அதிகாரிகளான ஹேமலதாவும், அபிராமி பொற்ச் செழியனும், தங்கள் பணி நேரம் முடிந்த பிறகும், கிட்டத்தட்ட 4 மணி நேரம் அந்த இந்தியருடன் விமான நிலையத்திலேயே காத்திருந்து, அவருக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்து, அவர் விமானம் ஏறிய பிறகே அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றனர்.

அந்த நபர் ஊருக்கு சென்று, கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை உடல்நிலை சரியில்லாத தனது தாயின் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். அதன் பிறகு அவர் இறந்து போனாலும், தன் தாயின் கடைசி நாட்களில் அவர் அருகில் இருக்கும் மன நிறைவை அந்த நபருக்கு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஹேமலதா மற்றும் அபிராமி ஆகிய இருவருக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன், இந்த நிகழ்வில் கலந்து இந்த விருதுகளை வழங்கினார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts