வாஷிங்டன்: உலகளவில் மிகவும் மதிப்புமிக்க உலோகமாகத் திகழும் தங்கம் பூமியில் எப்படி உருவானது என்ற கேள்வி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்தது. பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தங்கத்தின் உற்பத்திக்கு உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், சமீபத்திய ஆய்வுகள் மூலம் இந்த மர்மத்திற்கு விடை கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் மிகக் குறைந்த அளவில் லித்தியம் ஆகிய இலகுவான தனிமங்களே நிறைந்திருந்தன. தங்கம், பிளாட்டினம், யுரேனியம் போன்ற கனமான தனிமங்கள் பிற்காலத்தில்தான் தோன்றின. இந்த கனமான தனிமங்கள் சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகளின்போதும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்போதும் உருவாகியிருக்கலாம் என்று முன்பு கருதப்பட்டது. மேலும், தங்கம் மற்றும் வைரம் போன்ற கனமான பொருட்கள் விண்கற்கள் உள்ளிட்ட பல்வேறு விண்பொருட்களிலும் காணப்படுகின்றன.
இருப்பினும், நியூட்ரான் நட்சத்திர மோதல்கள் போன்ற நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். இதனால், பூமியில் இவ்வளவு தங்கம் எப்படி வந்தது என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அநிருத் படேல் தலைமையிலான குழுவின் சமீபத்திய ஆய்வு, தங்கத்தின் உருவாக்கத்திற்கான முக்கிய காரணத்தைக் கண்டறிந்துள்ளது. அதன்படி, தங்கம் உருவானதற்கான முக்கிய காரணம் மெக்னடார் எனப்படும் மிக சக்திவாய்ந்த காந்தப்புலனைக் கொண்ட ஒரு வகை நட்சத்திரம்தான் என்று தெரியவந்துள்ளது.
கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி: இத்தாலி சிறையில் ‘செக்ஸ் அறை’!
மெக்னடார் நட்சத்திரங்கள் சில சமயங்களில் ‘ஸ்டார்க்வேக்’ (starquake) எனப்படும் நட்சத்திரப் பூகம்பங்களை உருவாக்குகின்றன. இந்த நிகழ்வுகளின்போது, மிக அதிக ஆற்றல் கொண்ட ஒளிச்செறிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்த ஒளிச்செறிவுகள் நியூட்ரான்களால் நிரம்பியவை. இதன் காரணமாக, கனமான மூலக்கூறுகள் உருவாகுவதற்கான சாதகமான சூழல் ஏற்படுகிறது. இந்த கருதுகோளுக்கு வலு சேர்க்கும் விதமாக, 2017 ஆம் ஆண்டு இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதியபோது கனமான மூலக்கூறுகள் உருவானது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வு மூலம் தங்கம் உருவாக அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதற்கு மாறாக, மெக்னடார் வெடிப்புகள் பிரபஞ்சத்தின் ஆரம்ப கட்டத்திலேயே தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு, 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு மெக்னடார் வெடிப்பின் தரவுகளை விரிவாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், மெக்னடார் வெடிப்பின்போது கனமான மூலக்கூறுகள் உருவாக கணிசமான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு தொலைதூர மூலையில் உருவானது என்பது உறுதியாகிறது. நட்சத்திரங்களின் பிரம்மாண்டமான வெடிப்புகளும், காந்தப்புலன்களின் தீவிர செயல்பாடுகளுமே இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை பூமிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்பது வியப்பளிக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள், பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் அதில் உள்ள தனிமங்களின் தோற்றம் குறித்த நமது புரிதலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.