TamilSaaga

“உணவுப்பொருள் பற்றாக்குறை”.. இலங்கையில் அவசரநிலை பிரகடனம்” : இலங்கை தமிழர்கள் உள்பட அனைவரும் பாதிப்பு

அண்டை நாடான இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த உலகையே அச்சுறுத்தும் இந்த பெருந்தொற்று காரணமாக இலங்கையின் மிகமுக்கிய வருவாயாக கருதப்படும் சுற்றுலாவும் பெரிய அளவில் முடக்கம் கண்டுள்ளது. இதனையடுத்து இதுபோன்ற பல காரணங்களால் இலங்கையின் அன்னிய செலவானி இருப்பு என்பது பெருமளவு குறைந்துள்ளது.

இலங்கை ரூபாயின் மதிப்பும் வெகுவாக சரிந்து கொண்டே வருகிறது, இந்த இக்கட்டான முடக்க நிலை காரணமாக தற்பொழுது இலங்கையில் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் கடும் பிரச்சினை நிலவி வருகின்றது. உள்நாட்டில் இருக்கின்ற இருப்பின் அளவு குறைவினாலும், நாட்டிற்குள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைக்கும் நிலை அதிகரிப்பதாலும் நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

மேலும் அவற்றின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனால் ஒரு அதிரடி நடவடிக்கையாக இலங்கை அரசு தற்பொழுது உணவு பொருட்களின் விலை உயர்வை முழுமையாக தடுக்கவும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இந்த பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளார்.

மேலும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை நாட்டிற்குள் முறையாக விநியோகங்களை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ராணுவ அதிகாரிகள் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts