TamilSaaga

டெடி பியரில் இருந்து வந்த உயிரிழந்த அம்மாவின் குரல்.. கதறி அழுத சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

அம்மா என்ற வார்த்தைக்கு மாற்று இதுவரை இந்த உலகில் ஏதுமில்லை. அந்த அம்மாவின் பாசத்தை ஈடுசெய்ய இந்த உலகில் துலாபாரம் இல்லை. ஈடுசெய்ய பொருட்களும் இல்லை.

அப்படி பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாய் திடீரென நம்மை விட்டு பிரிந்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி யாருக்கும் இருக்காது. அதுவும், சிறு வயதில் ஒரு தாய் பெற்ற குழந்தையை விட்டு இறந்தால் அதைவிட ஒரு கொடுமை இந்த உலகில் இருக்குமா என்ன?

ஆனால், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சிறுவன் பிரென்னன் மான்செல் தன் 12வது வயதிலேயே தன் தாயை இழந்தவன். அம்மா லிசாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த பிள்ளை. எதிர்பாராத விதமாக இவரது அம்மா லிசாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.

இதனால் கடுமையான சிகிச்சை எடுத்தும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கடந்த மாதம் லிசா உயிரிழந்தார். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த பிரென்னன்னால் அந்த கொடிய இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில் தான், அவருக்குச் சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது.

அப்போது அவரது மூத்த சகோதரி பிரியோனி பரிசு ஒன்றை தம்பிக்கு கொடுத்திருக்கிறார். அது ஒரு டெடி பியர் தான். ஏற்கனவே தாய் இறந்த சோகத்தில் இருந்த பிரென்னன்னுக்கு தனது பிறந்தநாளை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், அக்கா கொடுத்த பரிசு என்பதற்காக அதை வாங்கிக் கொண்ட பிரென்னன்னுக்கு, அந்த பொம்மையில் இருந்து வந்த குரல் அவரை கதறி அழ வைத்துவிட்டது.

மேலும் படிக்க – தினசரி தொற்று 8,000க்கும் மேல்.. ‘இந்தியா போயிட்டு வரலாம்’ என்று பிளான் வச்சிருக்கீங்களா? – சீக்கிரம் சிங்கப்பூர் திரும்ப ரெடியாகிக்கோங்க!

ஆம்! ஒரு மாதத்திற்கு முன்பு, அவரை விட்டுப் பிரிந்து அதே தாயாரின் குரல் அந்த டெடி பியரில் கேட்டுள்ளது. திடீரென அம்மாவின் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில், அச்சிறுவன் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அந்த டெடி பியரில் இருந்து “ஹலோ டார்லிங், லவ் யூ லாட்ஸ், லவ், லவ், லவ் லவ் யூ” என்று அந்த தாயின் குரல் கேட்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு அச்சிறுவனின் தாயார் அனுப்பிய வாய்ஸ் நோட்-ஐ கொண்டு இந்த டெடி பியரை அவரது அக்கா வடிவமைத்துள்ளார். உயிரிழந்த அம்மாவின் குரலைக் கேட்டு அச்சிறுவன் அழுத வீடியோ, காண்போரை கலங்கச் செய்தது.

சிறுவயதில் தாயை இழப்பது எவ்வளவு கொடியது என்பதை இந்த வீடியோ பார்த்தால் உணர முடியும். அந்த சிறுவன், ஆறுதல் சொல்ல முடியாத இந்த இழப்பில் இருந்து மீண்டு, வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே நமது விருப்பம்!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts