TamilSaaga

மலேசியாவில் பெட்ரோனாஸ் எரிவாயுக் குழாய் வெடித்து பெரும் தீ விபத்து!

கோலாலம்பூர்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள Putra Heights பகுதியில் இன்று (ஏப்ரல் 1) அரசுக்கு சொந்தமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்தனர், அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

சுபாங் ஜெயா வட்டாரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து, சுபாங் ஜெயா முழுவதும் காணப்பட்டது. ஈத் பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோலாலம்பூர் அருகே குடியிருப்புப் பகுதிகள் சூழ்ந்த இடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல வீடுகள் தீக்கிரையான நிலையில், 7 குடியிருப்பாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை 8.10 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், உடனடியாக சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் பூச்சோங் தீயணைப்பு நிலையங்களில் இருந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையின் அறிக்கையின்படி, “சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த பயங்கர தீ விபத்திற்கு காரணம்”. மலேசியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸுக்கு சொந்தமான அந்த எரிவாயுக் குழாயின் வால்வு உடனடியாக மூடப்பட்டது.

இந்த தீ விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பலர் இந்த தீ விபத்து சுபாங் மற்றும் பூச்சோங் அருகே ஏற்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் ஈத் பண்டிகைக்காக பொது விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருந்த மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர். தீ விபத்து நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் வசிக்கும் ஒருவர் The Star செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், “திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டது, பின்னர் ஒரே குழப்பம். நாங்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினோம், மற்ற குடியிருப்பாளர்களும் வெளியேறுவதை பார்த்தோம்” என்று கூறினார்.

சமூக ஊடக தளமான எஸ்.ஜே. எக்கோ (SJ Echo) ஏப்ரல் 1 அன்று இந்த தீ விபத்தின் வீடியோவை வெளியிட்டது. மேலும் சிலர், இந்த தீ விபத்து Putra Heightsல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில், Putra Heightsல் உள்ள பெட்ரோல் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், அனைத்து குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பெட்ரோனாஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. தீ விபத்துக்கான முழு காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts