அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியாவில் ஒரு விமானம் கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய ரக விமானம் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, பயங்கர தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விழுந்த இடத்தில் இருந்த வாகனங்கள் மீது பாய்ந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்திருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. மீட்புக் குழுக்கள் தீயை அணைத்து, மீட்பு மற்றும் சேத மதிப்பீடு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. விபத்தின் காரணம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் நேர்ந்த விமான விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விமானத்தில் ஆறு பேர் பயணித்ததாகவும், குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயை அணைக்க 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.
பிலடெல்பியாவின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து, அங்கிருந்து மிக அருகிலேயே அமைந்துள்ள விமான நிலையத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பென்சில்வேனியா மாகாண எமெர்ஜென்சி சேவை குழு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட தகவலில், கோட்மன் மற்றும் பஸ்டெல்டன் அவென்யூ, ரூஸ்வெல்ட் மால் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன, மேலும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நிலைமை மீது கண்காணிப்பு நீடிக்கிறது.
விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் குடியிருப்பு வீடுகள் தீப்பிடித்து எரிவது தெரிகிறது. பிலடெல்பியாவின் அவசர மேலாண்மை அலுவலகம் விபத்து நடந்த இடத்தில் “பெரிய சம்பவம்” நடந்துள்ளதாகவும், அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விமானத் தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி மாலை 6:06 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ஜெட் விமானம் புறப்பட்டு 1,600 அடி உயரத்தை அடைந்தது. அதன் பிறகு சுமார் 30 வினாடிகளில் ரேடாரிலிருந்து மறைந்து விட்டது. இந்தத் தகவல்கள் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து சில கேள்விகளை எழுப்புகின்றன.
அதிர்ச்சி சம்பவம்: விமானமும் ஹெலிகாப்டரும் வானில் மோதிக்கொண்டதால் பரபரப்பு!
மூன்று நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் டிசியில் நடந்த விமான விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பயணிகள் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் 67 பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து கடந்த 24 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படுகிறது.
விமானப் பயணங்கள் பொதுவாகப் பாதுகாப்பானவை என்றாலும், இது போன்ற விபத்துகள் நடக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுகின்றன.