தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்து பேசியது இரு தரப்புக்கும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.
நமது சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.ஈஸ்வரன். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டி, சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் மூலம் பல நாட்களுக்கு முன்னர் முயற்சி மேற்கொண்டார்.
பிறகு, இது தொடர்பான தகவல் தலைமைச் செயலாளர் கவனத்திற்கும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவனத்திற்கும் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் கொண்டுச் சென்றனர். இதையடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்த செய்தியை முதல்வரிடம் கொண்டுச் சென்றார்.
உடனடியாக ஒப்புதல் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஏன் சிங்கப்பூர் அமைச்சரை அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட உடனேயே என்னிடம் சொல்லவில்லை? என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து, சற்றும் தாமதமின்றி, அமைச்சர் ஈஸ்வரனுக்கு என முதல்வர் நேரம் ஒதுக்கினார். தொடர்ந்து, நேற்று (செப்.18) முதல்வரின் வீட்டிலேயே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், முதல்வர் வீட்டுக்கு வந்த உடனேயே, அவரை முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் வரவேற்றார். அமைச்சருக்கும் உடன் வந்த அதிகாரிகளுக்கும் தேநீர் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டது. இந்த மீட்டிங்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் மற்றும் சில அதிகாரிகள் உடனிருந்தனர்.
மீட்டிங்கின் போது, தமிழகத்தின் இரு அமைச்சர்களும் தொழில்துறையிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் சிங்கை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அதனை கவனமாக கேட்டறிந்து கொண்ட அமைச்சர் ஈஸ்வரன், தமிழகம் மற்றும் சிங்கப்பூர் பண்பாடு மற்றும் வர்த்தகம் பற்றி ஆலோசித்திருக்கிறார்.
அப்போது, சிங்கை அமைச்சரின் பல யோசனைகள் முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்தன. உடனடியாக, அதுகுறித்த அறிக்கை தயார் செய்ய, அந்த தருணமே முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். வர்த்தகம் தொடர்பான தனது ஆலோசனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு சீக்கிரம் வினையாற்றுவார் என்று எதிர்பார்க்காத அமைச்சர் ஈஸ்வரன், தனக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பார்த்து நெகிழ்ந்து போனார்.