பெட்ரோல் வாங்க கையில் பணம் இல்லாததால் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆப்பிளும் அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் பழைய பல்லாவரம் சுரங்கப் பாதை அருகே சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஆப்பிள் மற்றும் அவரின் நண்பர் சாம், மூர்த்தியை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதனால் பதறிப்போன மூர்த்தி உடனே பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களின் வாகனத்தின் எண்ணை வைத்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது பம்மல், பசும்பொன் நகரை சேர்ந்த பாலா(எ) சாம் (19) மற்றும் பிரின்ஸ் (எ) ஆப்பிள் (21) என்பது தெரிய வந்தது.
பின்பு அவர்களது வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார், செல்போனையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக இருவரும் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.