குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு முன்னணி ஹீரோயினாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வலம் வந்தவர் நடிகை மீனா.
தமிழக சினிமாவில் ரஜினி, கமல், அஜித் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 90-களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார்.
பிறகு, கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூரூவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற குழந்தையும் உள்ளது. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தாலும் அவரது கணவரின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது.
நாட்கள் செல்ல செல்ல உடல் நலம் மேலும் பாதிக்கப்பட, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வித்யாசாகருக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து தமிழக ஊடகம் விகடன் வெளியிட்டுள்ள செய்தியில், “அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனையாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கும் போதும் ஏற்படக் கூடிய அரிய வகை நோய் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மீனா வீட்டுக்குப் பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு சுவாசிக் கோளாறு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காரணமாகவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சில தமிழக ஊடகங்கள் அவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளன. மருத்துவமனை சார்பாகவோ அல்லது நடிகை மீனா குடும்பத்தினர் சார்பாகவோ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியான பிறகே முழுமையான விவரம் தெரிய வரும். அப்படி அறிக்கை வெளியாகும் போது, தமிழ் சாகாவில் அந்த தகவல் முழுமையாக அப்டேட் செய்யப்படும்.