TamilSaaga

“அம்மா என்னை விட்டு போயிட்டீயே”.. இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட தாய்.. இரண்டே நாளில் வீடு திரும்பிய அதிசயம் – மண்டை குழம்பி நிற்கும் போலீஸார்!

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரங்கேறியுள்ள சம்பவம், குடும்பத்தினர் மட்டுமின்றி, போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சந்திரா. வயது 72. இவரது மகன் வடிவேலு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 20ம் தேதி, சந்திரா வீட்டின் அருகில் உள்ள சிங்கம்பெருமாள் கோவிலுக்கு போய் வருவதாக கூறி சென்றிருக்கிறார்.

இந்த சூழலில், செங்கல்பட்டு – தாம்பரம் ரயில் பாதையில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் பரவ, சந்திராவின் குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்திருக்கின்றனர்.

உடை, உடலமைப்பு ஆகியவற்றை வைத்து இறந்தது சந்திரா தான் என்று உறுதி செய்த குடும்பத்தினர், அங்கேயே கதறி அழுதனர். பிறகு ரயில்வே போலீசார் கையெழுத்து வாங்கிக் கொண்டு சந்திரா உடலை மகன் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, பெற்ற தாய் ரயிலில் அடிப்பட்டு இறந்த துக்கம் தாளாமல் கதறிய வடிவேலுவை குடும்பத்தினர் ஆறுதல்படுத்தினர். ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டப்பட்டது. விபத்தில் இறந்த உடல் என்பதால், அன்று மாலையே மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க – “அப்படியே திறமை பொங்கி வழியணும்”.. சிங்கப்பூரில் “Quality”-யான இந்திய ஊழியர்களை வளைத்துப் போடும் “அசைன்மென்ட்” – 5 ஆண்டுகளுக்கு விசா !

இந்த சூழலில், யாருமே எதிர்பார்க்காத விதத்தில் செப்.22 அன்று சந்திரா மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அவரைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. மகன் வடிவேலுவை இறந்து போன தாய் மீண்டும் உயிருடன் வந்ததை பார்த்து திக்கற்று பேச்சு மூச்சின்றி திணறிப்போனார்.

பிறகு போலீசார் வந்து விசாரித்ததில், அவர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் வேறு சில கோவில்களுக்கும் சென்றது தெரிய வந்தது. இவர் அணிந்திருந்த சேலையும், ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த பெண்ணின் சேலையும் ஒரே மாதிரியாக இருந்ததால், இறந்தது தாய் சந்திரா தான் என்று குடும்பத்தினர் தவறாக நினைத்துவிட்டனர். விபத்தில் முகமும் சிதைந்து போயிருந்ததால், அடையாளம் தெரியவில்லை.

கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால், எங்கு பார்த்தாலும் எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு பயந்துவிட்டேன் என்றும் சந்திரா போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அப்படியெனில், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பெண் யார்? என்று போலீசார் குழப்பத்தில் உள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts