ஆம்! இந்த கட்டுரையின் தலைப்பு இந்த ஐபிஎல் 2022 தொடரில் உண்மையாகப் போகிறது. என்னடா! “லாஜிக்கே இல்லாம பேசுறீங்க?” என்று சொல்லும் உங்களின் சில குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன. ஆனால், என்ன செய்வது? இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏன், தோனியை அணியில் இருந்து நீக்கும் அசைன்மெண்ட் ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது? என்று பார்ப்போம்.
ஐபிஎல் என்றாலே, அதில் தவிர்க்க முடியாத அங்கம் சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் Legacy என்பது பத்து பாகுபலிக்கு சமம். அதை கட்டமைத்தவர் மகேந்திர சிங் தோனி எனும் மகா கலைஞன். ஆம்! தோனி கலைஞன் தான். கிரிக்கெட் எனும் பொழுதுபோக்கின் மகா கலைஞன். எம்.ஜி.ஆர் மாதிரி, என்.டி.ஆர் மாதிரி, ரஜினிகாந்த் மாதிரி.. கிரிக்கெட்டில் ஒரு மகா கலைஞன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று அவர் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் என்பது, 5 கோப்பைகளை வென்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூட இல்லாதது. நாடு முழுவதும் எங்கு விளையாடச் சென்றாலும், அங்கு தோனி தான் ராஜா. அப்பேற்பட்ட ராஜா சென்னையின் அங்கமாக இருந்திருக்கிறார் என்றால், அதை விட தமிழக ரசிகனுக்கு வேறென்ன சந்தோசம் இருந்திருக்க முடியும்?
ஆனால், காலம் மாறுகிறது.. காட்சிகள் மாறுகிறது.. வயதும் கூடுகிறது.. திறமைகள் ஒவ்வொன்றாக குறைகிறது. அவரும் மனிதன் தானே… கடந்த இரண்டு சீசன்களாக தோனியின் பேட்டிங் என்பது அவரே ஏற்றுக் கொள்ளாத ஃபார்மில் தான் இருக்கிறது. ரசிகர்களுக்கு அது ஒரு குறையாக கண்களுக்கு தெரியவில்லை. ஏனெனில், அவர் தோனி.
ஆனால், கடும் சவால் நிறைந்த ஐபிஎல் களத்தில் மல்லுக்கட்டும் சிஎஸ்கே அணிக்கு இது எப்படி குறையாக தெரியாமல் இருக்கும்? கடந்த சீசன் வரை அவர் தான் கேப்டன். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தற்போது கேப்டன்சியை ஜடேஜாவுக்கு வழங்கியிருக்கிறார். நல்ல முடிவு.. தக்க நேரத்தில் கச்சிதமான முடிவு. சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றம் என்றாலும், அவர்களில் பலர் இதை ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர். ஆனால்….
இனிமேல் தான் சிக்கல் காத்திருக்கிறது. இந்த சீசனில் தோனி அணியில் நீடிப்பதன் முக்கிய காரணமே, ஜடேஜாவுக்கு அவர் தேவைப்படும் நேரத்தில் சில ஆலோசனைகளை வழங்கலாம் என்பதனால் தான். ஆனால், தோனியின் அறிவுரையைக் கேட்டு செயல்படும் அளவுக்கு ஜடேஜாவும் ஒன்றும் அனுபவம் இல்லாத வீரர் கிடையாது. பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் நிலவும் சூழல் எல்லாம் அவருக்கும் தெரியும். இருப்பினும், இக்கட்டான நேரங்களில் ஒரு கேப்டனாக செயல்படும் போது, எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதை அவர் தோனியிடம் இருந்து இப்போது கற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், நமது தமிழ் சாகாவுக்கு சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, முதல் ஒரு சில போட்டிகளில் தோனி நிச்சயம் அணியில் விளையாடுவார் என்பது உறுதி. குறைந்தது 4 ஆட்டங்கள் அவர் கண்டிப்பாக விளையாடுவார். ஆனால், இந்த 4 போட்டிகளிலும் அவர் எப்படி பெர்ஃபாமன்ஸ் செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவர் மீதமுள்ள போட்டிகளில் அணியில் நீடிப்பார் என்று தெரிகிறது. முதல் சில ஆட்டங்களில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினால், தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும். அப்படி ஒருவேளை அவரால் அனைத்து போட்டிகளும் தேவையான பங்களிப்பு கொடுக்க முடியவில்லை எனில், நிச்சயம் அவர் அணிக்கு பெரும் சுமையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இதனால், அவர் அடுத்தடுத்த ஆட்டங்களில் போட்டிகளில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் நீக்கப்படும் பட்சத்தில், ‘காயம்’ என்ற காரணம் தான் பொதுவெளியில் சொல்லப்படும் என்றும் தெரிகிறது. ஏனெனில், நேரடியாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவது தெரிந்தால், சிஎஸ்கே ரசிகர்கள் அதனை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நிர்வாகம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. இதனால், ரசிகர்களின் வெறுப்பை சிஎஸ்கே சந்திக்க நேரிடலாம். அது புதிய கேப்டன் ஜடேஜாவையும் பாதிக்கலாம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த அத்தனை ஐடியாக்களையும் சிஎஸ்கே-வுக்கு கொடுத்ததே தோனி தான். முதல் சில போட்டிகளில் தன்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை எனில், பெஞ்சில் இருந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறேன் என்று தோனியே வெளிப்படையாக கூறியிருக்கிறார். “மீடியாக்களிடம் காயம் காரணமாக தோனி ஓய்வு எடுக்கிறார் என்றும்… ஒரு சில போட்டிகள் அவர் விளையாடுவார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்” என்பது தோனியே கொடுத்த ஐடியா தானாம்.
அதே சமயம், கிடைக்கும் அந்த ஓய்வில் மீண்டும் சில பயிற்சிகளுக்கு பிறகு சூழலுக்கு ஏற்ப… அதாவது சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் நல்ல நிலைமையில் இருந்தால், மீண்டும் ஓரிரண்டு போட்டிகளில் களமிறங்குகிறேன். அப்போதும் என்னால் சரியாக விளையாட முடியவில்லை எனில், நிரந்தரமாக என்னை நீக்கிவிடலாம். ஒருவேளை என்னால் சரியாக பந்துகளை Connect செய்ய முடிகிறது என்றால், தொடர்ந்து விளையாடுகிறேன் என்பது தான் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொல்லியிருக்கும் தகவல் என்று தெரிகிறது. ஆனால், இதற்கு முதலில் புதிய கேப்டன் ஜடேஜா ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. “நீங்கள் இல்லாமல் விளையாடுவது அவ்வளவு நன்றாக இருக்காது. ரசிகர்கள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், அணிக்கு எது எதிராக கூட அமையலாம்” என்று ஜடேஜா தெரிவித்திருக்கிறார். ஆனால், தோனி சிறிய புன்னகையுடன் ‘Don’t worry.. I will handle it” என்று சிம்பிளாக கூறிருக்கிறார்.
2014ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, இனி தன்னால் சிறப்பாக விளையாட முடியாது என்பதை முடிவெடுத்து, டக்கென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வை அறிவித்தவர் தோனி. தன்னால் முடியும் என்றால் இமயத்தின் உச்சிக்கே நிற்காமல் ஓடக் கூடியவர்.. அதுவே தன்னால் முடியவில்லை என்று தெரிந்தால்… எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அணியின் நலனே முக்கியம் என்று யாருமே கணிக்கக் கூட முடியாத முடிவுகளை எடுத்து அதிர வைப்பார்.
ஏனெனில்.. அவர் தான் மகேந்திர சிங் தோனி!