TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு பெண்ணிடம் சீரழிந்த தமிழக ஊழியர்.. 5 வருடங்களாக வீட்டுக்கு போக முடியாத நிலை – மறக்க முடியாத அளவுக்கு 5 வயது பிஞ்சு குழந்தை சொன்ன அந்த “வார்த்தை”

நமது தமிழ் சாகாவின் “Exclusive” பக்கத்தில் பல முக்கிய தகவல்கள், செய்திகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில், ஊழியர்கள் பலருடைய நேர்காணலும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த வாரத்துக்கான Exclusive பக்கத்தில், இந்த கட்டுரையை வெளியிடுவது மிக முக்கியமான கடமையாக கருதுகிறோம். ஏனெனில், இந்த கட்டுரையை படிக்கும் பல உள்ளங்களில் சில உள்ளங்கள் உண்மையை புரிந்து கொண்டு, மனம் மாறலாம். அதிலும், சில உள்ளங்கள் கட்டுரையை படிக்கும் தருணத்தோடு அந்த குணத்தை விட்டொழியலாம்.

சிங்கப்பூரில் இருந்து நம்மை தொடர்பு கொண்ட ஊழியர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக…

“வணக்கம் தமிழ் சாகா. உங்கள் கட்டுரைகள் நிறைய படித்திருக்கிறேன். உங்கள் ஆதரவு நம்பிக்கை தருகிறது. என்னுடைய வாழ்க்கை நிச்சயம் ஒரு நாலு பேருக்கு உதவிகரமாக இருந்தால், நான் பேசுவது பிரயோஜனமாக இருக்கும்.

என்னோட ஊர் கும்பகோணம். பாலக்கரை பகுதியில் தான் வீடு. அப்பா வாழை இலை வியாபாரம் பார்த்தாங்க. குடும்ப நிலை, கடன் காரணமா சிங்கப்பூருக்கு 2013ம் ஆண்டு வேலைக்கு வந்தேன். வரும் போதே, கல்யாணம் பண்ணிட்டு தான் வந்தேன். இங்க construction துறைல தான் வேலை பார்த்துட்டு இருக்கேன். வந்த புதுசுல ரொம்ப கம்மியான சம்பளம் தான். அதனால், வீட்டுக்கு கம்மியா தான் பணம் முடிஞ்சது. அப்புறம், மெல்ல மெல்ல நல்லா வேலையை கத்துக்கிட்டேன்.

இதனால் எனது சம்பளமும் உயர்ந்துச்சு. என்னோட முதலாளிக்கு ரொம்ப நல்ல மனசு. அவருகிட்ட வேலைப்பார்க்குற யாரா இருந்தாலும், தனித்தனியா அவங்ககிட்ட பேசுவார். ஊழியர்களோட நிறை, குறைகளை கேட்டு தெரிஞ்சு வச்சிக்குவார். அப்படித்தான் என்னோட வறுமை நிலைமையை தெரிஞ்சு, என்னோட வேலையும் நல்லா இருந்ததால, பெரிய Increment கொடுத்தார். இதனால், ஊருக்கு நிறைய பணம் அனுப்ப முடிஞ்சது.

அப்போதான், இங்க ஒரு பெண்ணோட எனக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சு. ஆனா, டைவர்ஸ் வாங்கியிருந்தாங்க. அவங்க லைஃப்-ல பட்ட கஷ்டத்தை தினம் என்னிடம் பகிர்ந்துப்பாங்க. இப்படியே தினமும் பேசிக்கிட்டு இருந்தோம். வேலை நேரம் போக, மீதி நேரம் அவங்ககிட்ட பேசுறது தான் வேலையா இருந்துச்சு. ஆனால், எந்த நிலையிலும் இரண்டு பேரும் எல்லை மீறி பேசவும் இல்ல.. நடந்துக்கவும் இல்ல. கண்ணியமா தான் இருந்தோம்.

அவங்ககிட்டயே பேசிட்டு இருந்ததால, நான் மனைவிகிட்ட பேசுறது கூட குறைந்து போச்சு. அப்பப்போ வீட்டுக்கு போயிட்டு வரும் போது கூட, அவங்க கூட பேசுறத தவிர்க்க முடியல. ஒரு தடவை, அவங்க போட்டோ என் வாட்ஸ் அப்-ல இருந்ததை பார்த்துட்டு வீட்டுல பெரிய பிரச்சனை ஆச்சு. அதை சமாளிக்குறதுக்குள்ள போதும் போதும்-னு ஆச்சு. ஆனா, என் மனைவி மட்டும் சமாதானம் ஆகவே இல்ல.

மேலும் படிக்க – தமிழக ஊழியர்களே… இன்னும் 4 நாட்களே பாக்கி… அக்டோபர் 1 முதல் சிங்கப்பூரில் இந்த புதிய விதி அமல்!

பிறகு நான் சிங்கப்பூர் வந்துட்டேன். தினம் நேரில் சந்திச்சு பேசிக்க ஆரம்பிச்சோம். இந்த சூழல்ல ஒருநாள் அவங்க என்கிட்டே ஒரு அவசர தேவை-னு சொல்லி பணம் கேட்டாங்க. அவங்க கேட்ட தொகை 500 டாலர். அந்த மாதம் சம்பளம் வந்தவுடன் அப்படியே 500 டாலர் எடுத்து கொடுத்தேன். பிறகு, அப்பப்போ பணம் கேட்க ஆரம்பிச்சாங்க. நானும், ஒரு மயக்கத்துல கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன். கிட்டத்தட்ட 7000 டாலர் கொடுத்திருக்கேன்.

திடீர்னு ஒருநாள் என்கிட்டே வந்து, ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ கேட்டாங்க. நான் அதை கேட்டு அதிர்ந்து போயிட்டேன். மீண்டும் அவங்க என்னிடம், ‘உங்ககிட்ட நிறைய பணம் வாங்கியிருக்கேன். அதை என்னால திருப்பி கொடுக்க முடியுமான்னு தெரில. அதேசமயம், உங்களை மாதிரி ஒரு நல்லவரை கணவனாக அடையணும்-னு விரும்புறேன். ஏற்கனவே ஒருமுறை ஏமாந்துட்டேன். அதனால், இந்த முறை உங்களை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்” என்றார்.

‘எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே. அது உங்களுக்கும் தெரியுமே’ என்றேன். அதுக்கு அவங்க, ‘அது தெரிஞ்சு தான் கேட்குறேன். உங்களுக்கு ஓகே-ன்னா எனக்கும் ஓகே. என்னால பணம் திரும்ப கொடுக்க முடியுமான்னு தெரியல. ஆனால், அதுக்கு பதிலா உங்களை கல்யாணம் பண்ணிக்க ரெடி’ என்று சொல்லிட்டு விறுவிறுன்னு போயிட்டாங்க. பிறகு, அந்த பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கல. ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது, ‘கல்யாணம் ஆன வெளிநாட்டு ஊழியர்களை டார்கெட் செய்து, இப்படி பணம் கறந்து, பிறகு கல்யாணம் செய்து கொள்ள வறுபுறுத்துவது போல் டிராமா செய்து, அந்த நபரையே ‘பணமும் வேண்டாம்.. கல்யாணமும் வேண்டாம்’ என்று சொல்ல வைத்து ஏமாற்றும் கும்பல் ஒன்று உலாவி வருவது தெரிய வந்தது.

அப்படி சிக்கி 7000 டாலர்கள் வரை இழந்துவிட்டேன். ஒருக்கட்டத்தில் என் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வர பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. இதற்கிடையில், 2017ம் ஆண்டு எனக்கு குழந்தை பிறந்தது. இந்த பிரச்சனைக்கு பிறகு, இன்று வரை எனது மகனை பார்க்க முடியாமல் தவித்து வருகிறேன். என் பெற்றோர், மாமனார், மாமியார் கூட என்னை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால், என் மனைவி இப்போது அவரை என்னை மன்னிக்கல. என் மகனிடமும் நான் செய்த தவறை சொல்லி வளர்த்திருக்காங்க.

பெத்த குழந்தையை இந்த நொடி வரை தொட்டு தூக்கல. தினம் தினம் அழுதுகிட்டு இருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் அம்மா மூலமா, ஃபோன்-ல என் பையன்கிட்ட பேசினேன். அப்போ அவன் என்னிடம், ‘நீ அம்மாவ ஏமாத்திட்ட.. எனக்கு அம்மா தான் வேணும்’-னு சொன்ன வார்த்தை இந்த நொடியும் என்ன குத்திக்கிட்டு இருக்கு.

என் விரல் நுனி கூட அந்த பொம்பள மேல பட்டதில்ல.. ஆனால், தினம் அவளிடம் பேசல-னா பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு பைத்தியமா இருந்தேன். அதனால் தான் இன்னைக்கு, இப்படியொரு கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கேன்” என்று தழுதழுக்கும் குரலில் நிறைவு செய்தார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts