TamilSaaga

சிங்கப்பூரில் நடந்த “இளையர் விழா 2021” – பங்கேற்று சிறப்பித்த முனைவர் கு. ஞானசம்பந்தன்

இளையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை அதிகாரவப்பூர்வமாக அமைப்பினுள் கொண்டுவந்ததை கொண்டாடும் விதமாகவும், இளையர்களை உற்சாகப்படுத்தி திறம்படசெயல்பட அழைப்பு விடுக்கும் விதமாகவும்,‘இளையர் விழா-2021’என்ற நிகழ்வை ஆகஸ்டு மாதம் 8ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) இணையம் வழியாக சிறப்பாக நடத்தி இளையர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து உவகையுடன் வரவேற்று மகிழ்ந்தது.

இளையர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சங்கத்தின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதே முன்னவர்களின் கனவு என்பதை பாரதியின் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற வரிகளைமேற்கோளிட்டு கூறி விழாவிற்கு வந்துள்ள பெருந்தகையாளர்களையும், விருந்தினர் அனைவரையும் இனிதே வரவேற்றார் சங்கத்தின் தலைவர் திரு. சா. சௌந்தர்ராஜன்.

இம்மாபெரும் விழாவிற்கு மணிமகுடம் சேர்த்த சிறப்புப் பேச்சாளர் கலைமாமணி. பேராசிரியர் முனைவர். கு. ஞானசம்பந்தன், ‘வேரும் விழுதும்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த அவர் பின்னர் இளமைக் கால கல்லூரி நினைவுகளை தனது நகைச்சுவையான பேச்சால் மீட்டெடுத்து கொடுத்தது அருமை.

நட்பின் பெருமையையும், சிறப்பினையும் திருக்குறள் மற்றும் கண்ணதாசன் வரிகளோடு நினைவு கூர்ந்தார்.இன்றைய நடைமுறைப்படி, முன்னாள் மாணவர்கள் எடுக்கும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை பற்றி குறிப்பிட்ட இவர், ஆலமர வேர்களாகிய முன்னாள் மாணவர்களும், விழுதுகளாகிய இளையர்களும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை சிறப்பாக எடுத்துக் கூறி விடைபெற்றார்.

கழகத்தின் ஆலோசகரான திரு. சேது நாராயணன்,தன்னுடையஉரையில்,நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வந்துள்ள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் திரு. வே. முருகேசன் அவர்களைப் பற்றி சிறப்பான சில செய்திகளை நினைவு கூர்ந்தார். அவர் துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில் அவர் பல்கழைக் கழகத்திற்கு ஆற்றிய அளப்பறிய பணியையும், சிங்கப்பூர் மற்றும் உலகளாவிய முன்னாள் மாணவர் சங்கத்துடன் அவருக்கு இருந்த தொடர்பைப் பற்றியும் களிப்புடன் எடுத்துரைத்து அவரை வரவேற்றார்.

‘இளையர்விழா-2021’ பற்றிய சிறப்புக் காணொளியை வெளியிட்ட பேராசிரியர் முனைவர் திரு.வே. முருகேசன்,தன்னுடைய உரையில்இளையர்களின் கடமையையும், பொறுப்புகளையும் நினைவுபடுத்திய அவர், பரந்து விரிந்த இந்த பல்கலைக்கழகத்திற்குஅனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு உலகமே வியக்கும் அளவிற்கு நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் உலகமெங்கும் செயல்படும் முன்னாள் மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக பெருமைகளை எட்டுத்திக்கும் பறைசாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார்.

சங்கத்தில் இளையர்களின் தரவுகளை சேகரித்த பெருமைகளைப் பற்றி எடுத்துரைத்த விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு. கருணாதிதி,சங்க விதிமுறைகளின் மாற்றம் பற்றி தெளிவாக விளக்கியதோடு மற்ற இளையர்களையும் குழுவில் சேர வருமாறு அழைப்பு விடுத்தார்.

இளையர்கள் இருவர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். சங்கத்தின் முதல் பெண் இளைய உறுப்பினராகதன்னை இணைத்துக் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிந்தனைச் செல்வன் பெண்களுக்கே உரிய நிறைய பணிகளுக்கு மத்தியில் இந்த கல்லூரி தோழமை புத்துணர்ச்சி அளித்து நம்பிக்கை விதையை விதைப்பதாக கூறி அகம் மகிழ்ந்ததோடு மேலும் நிறைய பெண்கள் இணைய முன்வரவேண்டும் என அன்பான வேண்டுகோள் வைத்தார். திரு. வடிவேலு, திரைக்கடல் தாண்டி திரவியம் தேட புலம்பெயர்ந்த சிறிது நாட்களில் கல்லூரித் தோழமையின் உயிர்துடிப்பான நட்பு சிங்கையிலும் தொடர்ந்து மலர, முன்னாள் மாணவர்கள் படைத்த நிறைய நிகழ்ச்சிகளினாலும், தன்னலமில்லா செயல்களினாலும் ஈர்க்கப்பட்டு தான் வாழ்நாள் உறுப்பினராக சேர்ந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியை வழி நடத்தியமுன்னாள் தலைவர் திரு. நெடுஞ்செழியன் மற்றும் விழாவின் துவக்கத்தை தொகுத்து வழங்கிய திரு. செந்தில் சம்பந்தம் ஆகியோரின் இனிய தமிழ் பாராட்டுக்குரியது. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாய் நின்ற சிறப்புப் பேச்சாளர், பெருந்தகையாளர்கள், ஆதரவாளர்கள், ஏற்பாட்டுக்குழுவினர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை நல்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் செயலாளர் செல்வி வீ. ஸ்வர்ணா.

Related posts