TamilSaaga
Arrest

சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்குவதற்காக வெளிநாட்டு பெண் செய்த செயல் – 6 மாதங்கள் சிறைத்தண்டனை!

வியட்நாமைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்குவதற்கு போலித் திருமணம் செய்து கொண்டால் போதுமானது என்று விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டார். பின் அதற்கு முயற்சித்தபோது தான் அது ஒரு மோசடி என்பது தெரியவந்தது. வியட்நாமைச் சேர்ந்த 31 வயதான குயேன் தி துய் குயேன் (Nguyen Thi Thuy Quyen) என்ற பெண், சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்குவதற்காக போலித் திருமணம் செய்ய முயன்று, அதற்காக 44,000 சிங்கப்பூர் வெள்ளி செலவிட்டுள்ளார்.

குயேன் மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. முதலாவது, குடிநுழைவு அனுமதி பெறுவதற்காக ஜோனதன் குவேக் சி ஹௌ என்ற ஆடவருடன் போலித் திருமணம் செய்துகொண்டது. இரண்டாவது, நீண்ட கால அனுமதி அட்டை விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை வழங்கியது. மேலும், தண்டனை விதிப்பின்போது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆகஸ்ட் 27 முதல் 2023 பிப்ரவரி 2 வரை வேலை அனுமதி அட்டை மூலம் சிங்கப்பூரில் தங்கியிருந்த குயேன், அது முடிவடையும் நிலையில், தனது தங்குதலை நீட்டிக்க போலித் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் ஜோனதன் குவேக் மீது குற்றம் சுமத்தப்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, போலித் திருமணத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10,000 வெள்ளி அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல், குடிநுழைவு விண்ணப்பத்தில் பொய் தகவல் அளித்தால், ஒரு ஆண்டு சிறை, 4,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு, சிங்கப்பூரின் கடுமையான குடிநுழைவு விதிகளை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் போலி திருமணங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போலி திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts