எதிர்வரும் புத்தாண்டான 2023 ஆண்டிற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், புது வருட காலண்டர்கள் சிங்கப்பூருக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் ஊர் சிவகாசி. இந்திய அளவிலேயே பட்டாசு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சிவகாசி, காலண்டர் தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதமே, அடுத்த ஆண்டுக்கான காலண்டர் பணிகள் இங்கு தொடங்கிவிடும். ஜூன் தொடங்கி ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய இந்த மாதங்களில் காலண்டருக்கு கடும் கிராக்கி ஏற்படும். இந்தியாவில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, லெபனான் போன்ற மற்ற நாடுகளுக்கும் அதிக அளவில் சிவகாசி காலண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வீடு, கடை, தொழில் செய்யும் இடங்கள், கட்சி அலுவலகங்கள் என காலண்டர்கள் இல்லாத இடமே கிடையாது எனலாம். அதேபோல் தான் நமது சிங்கப்பூரில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் காலண்டர்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும், தமிழ் காலண்டர்களை நாம் காண முடியும்.
காலை எழுந்ததும் நல்ல நேரம், ராசி பலன், கிழமை என்று அனைத்தையும் பார்த்து தெரிந்து கொண்டு அன்றைய நாளை தொடங்கும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட காலண்டர்கள் தயாரிப்பில் தேசிய அளவில் விருதுகளை வென்று புகழ் பெற்றுள்ளது சிவகாசி.
அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான காலண்டர்கள் இப்போது சிவகாசியில் இருந்து அதிக அளவு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிங்கையில் இருந்து நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன.