TamilSaaga

சிங்கப்பூர் Silent Hero’s-ன் மனிதநேய விருது! தன்னலமற்ற மருத்துவருக்கு ஒரு சல்யூட்!

Silent Hero’s என்ற தொகுப்பில் 2019-ம் ஆண்டு மனிதநேயதிற்கான விருதை வென்றவர் தான் டாக்டர். பவானி ஸ்ரீராம். 

மருத்துவரான இவர் Kandang Kerbau மருத்துவமனையில் முன்னாள் மருத்துவராக பணிபுரிந்தவர். மேலும் இவருக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான மருத்துவப் பயிற்சியிலும் அனுபவம் உள்ளது. 

அப்படி இவர் என்ன செய்தார் தெரியுமா? ஒரு வீட்டில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை வளர்வதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய புரிதல் உள்ளதா? இவை தெரிந்திருந்தால் ஏன் மருத்துவர் பவானிக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பதை எளிதாய்ப் புரிந்துகொள்ள முடியும்.

PwDs (Person With Disabilities) எனப்படும் இயலாமை குணம் கொண்ட நோயாளிகளுக்கு உதவும் சேவையைத் தான் மருத்துவர் பவானி செய்து வருகிறார். சாதாரண மக்களால் தங்கள் உடல் உபாதைகளைக் குறித்து தெளிவாக மருத்துவரிடம் எடுத்துரைக்க முடியும். அவர்களுக்கு மருத்துவம் வழங்குவது அவ்வளவு கடினமாய் இராது. ஆனால் ID அல்லது AWD-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு உபாதைகளையும் கண்டறிந்து அதற்கேற்ற சரியான மருத்துவத்தை வழங்க வேண்டும். இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதே புரியாது. புதிய சூழ்நிலையால் சிலர் கட்டுக்கடங்காமல் நடந்துகொள்வதுண்டு. தங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவரிடம் எடுத்துரைக்கும் அளவுக்கு அவர்களுக்கு தெளிவான மனநிலை இருக்காது. 

சாதாரண மனிதனுக்கு 10 நிமிடங்கள் எடுக்கும் மருத்துவ பரிசீலனை இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் எடுக்கும். அவர்களுடன் அன்பாக உரையாடி ஒவ்வொரு காரியங்களைக் குறித்தும் பொறுமையுடன் கேட்டல் தான் பதில் கிடைக்கும். 

அப்படிப்பட்ட நோயாளிகளை அன்புடன் அரவணைக்கும் சேவையைத் தான் பவானி செய்து வருகிறார். இவர் MINDS மருத்துவ மையத்தில் தன்னார்வ மருத்துவராக பணிபுரிகிறார். இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்புடன் மருத்துவம் அளித்து வருகிறார். அவர் MINDS மையத்தில் இணைந்த இரண்டு வருடத்தில் ஏறத்தாழ 240 நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளித்துள்ளார். 40 நோயாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே மருத்துவம் பார்த்துள்ளார். 

இந்த சேவைகளுக்கு பவானி அவர்கள் எந்த ஊதியத்தையும் பெறாமல் பணியாற்றி வருகிறார். தன்னலமற்ற இவரது சேவையைப் பாராட்டி 2019 Silent Hero தொகுப்பில் இவருக்கு மனிதநேய விருது பரிந்துரைக்கப்பட்டு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2019 ஆகஸ்ட் 31 அன்று Shangri-La ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சரான திரு தேச்மண்ட் லீ அவர்களால் மருத்துவர் பவானி ஸ்ரீராம் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நோயாளிகளை அன்புடன் அணுகுவது மட்டுமின்றி அவர்களின் குறைகளைக் கண்டறிந்து சரியான மருத்துவம் வழங்கி வரும் பவானி அவர்களை மருத்துவ உதவி பெற்றவர்களின் குடும்பத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர். 

வாழ்க்கை என்னதான் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தாலும் நம்மைச் சுற்றி மருத்துவர் பவானி போன்ற சிறந்த மனிதர்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts