SINGAPORE: சிங்கை டாம்பைன்ஸ் ரீடெய்ல் பூங்காவில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி, அங்கிருந்த நபரை மாஸ்க் அணியச் சொன்னதற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜுலை 4ம் தேதி இரவு சுமார் 10.20 மணியளவில் டாம்பைன்ஸ் ரீடெய்ல் பூங்காவில் உள்ள ஜெயிண்ட் ஹைபர்மார்ட்-ன் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் பெருமாள் பணியில் இருந்தார்.
பாதுகாப்புக்கான நிர்வாக நடவடிக்கைகளின்படி கட்டிடத்திற்குள் நுழையும் மக்கள், மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்த அதிகாரியின் பணி.
அந்த வகையில் சுரேஷ் பெருமாள் பணியில் இருந்தபோது, மாஸ்க் அணியாத ஒரு நபர் கட்டிடத்தை நெருங்குவதைக் கண்டார். அப்போது அந்த நபரை தடுத்த சுரேஷ், மாஸ்க் எடுத்து வரவில்லை எனில் உள்ளே அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
இதனால், வெறும் மாஸ்க் அணியாததற்காக என்னை வெளியே போக சொல்கிறாயா என்று கோபம் கொண்ட அந்த நபர், கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு சுரேஷ் மிக மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த அந்த நபர், திடீரென பணியில் இருந்த சுரேஷை பிடித்துத் தள்ளினார். அநாகரீகமாக பேசினார். பின்னர் அவர் சுரேஷ் தாக்கவும் தொடங்கினார். இதனால், சுரேஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோவையும் சங்கம் வழங்கியுள்ளது. அதில், அந்த நபர் பாதுகாவலர் சுரேஷை தள்ளுவதையும், குத்துவதையும் காண முடிகிறது. சிறிது நேரம் கழித்து பொதுமக்களில் இருவரும் ஒரு ஊழியரும் பாதுகாப்பு அதிகாரிக்கு உதவி செய்வதைக் காண முடிகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, மனநலச் சட்டத்தின் கீழ் 57 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கம், இந்தச் சம்பவத்தை “தேவையற்ற புத்தியில்லாத மற்றும் வன்முறையான செயல்” என்று கண்டித்துள்ளது.
சுரேஷ் பாதுகாப்பு நிறுவனமான ட்வின்ராக்கில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.