சிங்கப்பூரில் பசீர் பஞ்சாங்கில் உள்ள மேப்பிள் பியர் பாலர்பள்ளியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (ஆகஸ்ட் 10) தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் 243 பாசிர் பஞ்சாங் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தாக கூறியது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வருவதற்கு முன்னர் தீ சம்பவத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று கண்டறிய கொழுந்துவிட்டு எறிந்த தீக்குள் இருவர் தைரியமாக சென்ற சமத்துவம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) ரேச்சல் ஓங், வெளியிட்ட பேஸ்புக் பதிவில் அந்த இருவரை மாதர வாழ்த்தியுள்ளார்.
நல்வாய்ப்பாக தீ சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் பள்ளி வளாகத்திற்குள் இல்லை. இதனை அடுத்து விரைந்து வந்த SCDF அதிரடியாக பள்ளிக்குள் நுழைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலர்பள்ளியில் பரவிய தீ பெரும்பாலும் வளாகத்தின் முன் பகுதியில் மட்டுமே இருந்ததாக SCDF வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. மேலும் தீயணைப்பான்களை கொண்டு தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தீக்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.