TamilSaaga
NUC

இந்தியாவிற்காக நிதி திரட்டும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மாணவி

கடந்த சில மாதங்களில் இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மாணவி தற்போது இந்திய மக்களுக்கு உதவும் வகையில் 1 மில்லியன் டாலர் நிதி திரட்டும் முயற்சியை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ரிஷிக்கா மதன் (Rishika Madan) சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்க விரும்பி கொரோனா கட்டுப்பாடுகளால் தனது முதல் செமஸ்டர் படிப்பை கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே பயின்றார். அப்போது முதல் முறையாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்பு குணமடைந்தார்.

பின்னர் 2021 பிப்ரவரி மாதம் தனது இரண்டாவது செமஸ்டர் பட்டப்படிப்பை சிங்கப்பூர் வந்து சேர்ந்து தேசிய பல்கலைகழகத்தில் தொடர்ந்தார். அந்த சமயத்தில் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்தார்.

தனக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைத்ததால் இரண்டு முறையும் தொற்றிலிருந்து மீண்டதாகவும், எனினும் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு நல்ல வசிதியான சிகிச்சை தனக்கு கிடைத்தது போல் கிடைப்பதில்லை எனக் கூறிய மாணவி, இந்தியாவிற்கு மருத்துவ கட்டமைப்பு, ஆக்ஸிஜன் செறிவூட்டும் வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 1 மில்லியன் டாலர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு மிஷன் இந்தியா (Mission India) என பெயரிட்டு NUS Graduate மாணவர் அமைப்பு (GSS) மற்றும் TIE Singapore எனும் லாப நோக்கமில்லா அமைப்புடன் இணைந்து இந்திய மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க நிதி திரட்டும் பணியை மாணவி ரிஷிக்கா நடத்துவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம் தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts