TamilSaaga

சிங்கப்பூரில் புதிய வகை விலங்குகளால் பாதிப்பு ஏற்படலாம்! உஷாரா இருங்க மக்களே! எச்சரித்த NParks….

சிங்கப்பூர், ஏப்ரல் 12, 2025: சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக சிறிய, மெலிந்த உடல்வாகு கொண்ட பல்லிகளைக் காண முடிகிறது. இவற்றின் தொண்டைப் பகுதிக்குக் கீழே மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறம் இருப்பதைக் கவனிக்கலாம். ‘பிரவுன் அனோல்’ என அழைக்கப்படும் இந்தப் பல்லிகள், நிலத்திலும் மரங்களிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இவை சிங்கப்பூருக்கு உரியவை அல்ல என்றாலும், தற்போது இங்கு பரவலாக உள்ளன.
பஹாமஸ், கியூபா, சுவான் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பிரவுன் அனோல் பல்லிகள், சிங்கப்பூரில் புதிதாகக் குடியேறிய இரண்டு விலங்கு இனங்களில் ஒன்றாகும். மற்றொரு இனம், ‘கிரீன்ஹவுஸ் ஃபிரோக்’ எனப்படும் தவளை. இந்தத் தவளையும் பஹாமஸ், கியூபா, கேமன் தீவுகளைச் சேர்ந்தது. சிங்கப்பூரில் இவை 2015ஆம் ஆண்டு செம்பாவாங்கில் முதன்முதலில் காணப்பட்டன. 12 முதல் 30 மில்லிமீட்டர் நீளம் கொண்ட இந்தத் தவளைகள், தற்போது பல இடங்களில் பரவியுள்ளன.

கடந்த மார்ச் மாதம், செம்பாவாங்கில் உள்ள ஒரு வீட்டின் மாடிமுகப்பில் இரண்டு பிரவுன் அனோல் பல்லிகள் கண்டறியப்பட்டன. இயற்கையாக சிங்கப்பூரில் வாழாத இவ்வகை விலங்குகள், ‘அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்’ என வகைப்படுத்தப்படுகின்றன. இவை உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு இடையூறு விளைவிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கலாம்.

அதிக இனப்பெருக்க விகிதம், மாறுபட்ட சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவை இவற்றால் உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக் காரணமாகலாம். தேசிய பூங்காக் கழகம் இந்த இரு இனங்களின் பரவலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தேசிய பூங்காக் கழகப் பல்லுயிர்ச்சூழல் (NParks) நிலையத்தின் குழும இயக்குநர் டாக்டர் கேரீன் டுன், இந்தப் பல்லியும் தவளையும் வெளிநாடுகளில் உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு இடையூறாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இருப்பினும், சிங்கப்பூரில் இவற்றால் பாதிப்பு ஏற்பட்டதற்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து இந்தப் புதிய இனங்களின் தாக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் விழிப்புணர்வு

  • சிங்கப்பூரில் உள்ள பொதுமக்கள் இந்த உயிரினங்களைப் பார்த்தால், தேசிய பூங்காக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம்.
  • உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

 

Related posts