TamilSaaga

கடுமையான சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூரிலும்.. இப்படிப்பட்ட குற்றங்கள்! வெலவெலத்துப் போன போலீஸ்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குற்றங்கள் அருவி போல் கொட்டுகிறது. யார் எங்கிருந்து என்ன வேலை செய்கிறார்கள் என்று எதுவும் நமக்கு தெரிவதில்லை. அப்படியொரு குற்றம் தான் சிங்கப்பூரில் இப்போது நடந்திருக்கிறது. சிங்கையில் 37 வயதான எட்மண்ட் க்வெக் லிவென் என்ற நபர், பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் 160-க்கும் மேற்பட்ட (upskirt) அப்ஸ்கர்ட் காணொளிகளையும் புகைப்படங்களையும் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

அப்ஸ்கர்ட் என்றால் என்ன?

அப்ஸ்கர்ட் காணொளிகள் அல்லது புகைப்படங்கள் என்பது, ஒரு நபரின் (பொதுவாக பெண்களின்) அனுமதியின்றி, அவர்களின் ஆடையின் கீழே உள்ள உள்ளாடைகள் அல்லது தனிப்பட்ட உடல் பாகங்களை ரகசியமாக பதிவு செய்யும் செயல் ஆகும். இது பொதுவாக பப்ளிக் கூடும் இடங்களில், எஸ்கலேட்டர்கள், பேருந்து நிறுத்தங்கள், அல்லது மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் நடைபெறுகிறது. மொபைல் போன்கள், மறைவான கேமராக்கள், அல்லது பிற உபகரணங்களைப் பயன்படுத்தி இத்தகைய குற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் குற்றவாளியின் தனிப்பட்ட இன்பத்திற்காகவோ அல்லது இணையத்தில் பகிரப்படவோ பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பிள்ளைகளுக்காக வாழ்ந்தவரை பறிகொடுத்த குடும்பம் – துணை நிற்கும் சக ஊழியர்கள்! சல்யூட்!

இத்தகைய செயல்கள், பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை கடுமையாக மீறுவதோடு, அவர்களுக்கு மனரீதியான துயரத்தை ஏற்படுத்துகின்றன. சிங்கப்பூரில், அப்ஸ்கர்ட் காணொளிகள் எடுப்பது “வோயரிசம்” (Voyeurism) மற்றும் “பெண்களின் கண்ணியத்தை புண்படுத்துதல்” (Outrage of Modesty) என்ற குற்றங்களின் கீழ் வருகிறது. இவை சிங்கப்பூர் தண்டனைச் சட்டத்தின் (Penal Code) பிரிவு 377BB மற்றும் 509-ன் கீழ் தண்டிக்கப்படுகின்றன.

என்ன நடந்தது?

சிங்கப்பூரில் எட்மண்ட் க்வெக் லிவென் (37) என்ற நபர், 2019 முதல் 2024 வரை 160-க்கும் மேற்பட்ட அப்ஸ்கர்ட் காணொளிகளையும் புகைப்படங்களையும் எடுத்த குற்றத்திற்காக, இன்று (ஜூன் 4) அவருக்கு 27 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2021 பிப்ரவரியில், குவோகோ டவர் (Guoco Tower) என்ற இடத்தில், ஒரு பெண் எஸ்கலேட்டரில் பயணிக்கும்போது க்வெக் அவரை ரகசியமாக பதிவு செய்தார். பின்னர், லிஃப்ட் லாபியில் மற்றொரு வீடியோவை எடுத்தார். இந்த நேரத்தில், க்வெக் அவரது தொடையைத் தொட்டபோது, அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் க்வெக்கை பிடித்து, புகைப்படம் எடுத்தாரா என்று கேட்க. க்வெக் ஒரு மங்கலான புகைப்படத்தைக் காட்டி, அதை நீக்குவதாகக் கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த பெண் அவரை துரத்தி, பொது மக்களின் உதவியுடன் அவரை பிடித்துவிட்டார். பின்னர், காவல்துறை விசாரணையில், க்வெக் அந்த இரண்டு காணொளிகளையும் நீக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பெண்ணுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று அரசு வழக்கறிஞர் ஜியோங் சியு யின் கூறினார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் புகழ்பெற்ற PSA Marine-இல் வேலைவாய்ப்புகள்!

விசாரணையில், க்வெக்கின் மொபைல் போனில் 2019-ல் எடுக்கப்பட்ட 141 அப்ஸ்கர்ட் புகைப்படங்கள் கண்டறியப்பட்டன. மேலும், 2024 ஏப்ரலில், விசாரணையின் கீழ் இருந்தபோதும், க்வெக் மீண்டும் குற்றம் செய்தார். ஊர் டம்பைன்ஸ் ஹப் (Our Tampines Hub) நீச்சல் வளாகத்தில் நடந்த பெண்கள் வாட்டர் போலோ போட்டியைப் பார்க்க சென்று, நீச்சல் உடையில் இருந்த பெண்களை பதிவு செய்தார். ஒரு பயிற்சியாளர் இதைக் கவனித்து, காணொளிகளை நீக்குமாறு கூறி, நீச்சல் வளாக ஊழியர்கள் காவல்துறையை அழைத்தனர். காவல்துறை க்வெக்கின் போனை சோதித்தபோது, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024-ல் எடுக்கப்பட்ட 12 அப்ஸ்கர்ட் புகைப்படங்கள் கிடைத்தன.

மனநல மதிப்பீடு

மனநல மருத்துவமனையில் (IMH) நடத்தப்பட்ட ஒரு மனநல மதிப்பீட்டில், க்வெக்கிற்கு மனச்சோர்வு நோய் (Major Depressive Disorder) இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், 2024-ல் இந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், ஆனால் இது குற்றத்திற்கு காரணமாக இல்லை என்றும் மருத்துவர் தெரிவித்தார். அதாவது, க்வெக்கிற்கு வோயரிசம் மற்றும் பொருட்களின் மீதான மோகம் (Fetishism) இருந்தாலும், இவை ஒரு கடுமையான மனநோயாக கருதப்படவில்லை. மருத்துவரின் கூற்றுப்படி, க்வெக் தனது செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருந்தது மட்டுமின்றி, தனது செயல்கள் சட்டவிரோதமானவை என்பதையும் அறிந்திருந்தார். இதனால், க்வெக்கிற்கு 27 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றங்கள் ஏன் தீவிரமாக கருதப்படுகின்றன என்பதற்கு சில காரணங்கள்:

தனியுரிமை மீறல்: ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட உடல் பாகங்களை பதிவு செய்வது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பயம், அவமானம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

மனரீதியான பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணரலாம், மேலும் இது அவர்களின் சமூக வாழ்க்கை மற்றும் மனநலத்தை பாதிக்கலாம். உதாரணமாக, 2018-ல் NUS மாணவி மோனிகா பேய் (Monica Baey) தனது தங்கும் விடுதியில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட சம்பவத்தை பகிர்ந்து, இதன் மனரீதியான தாக்கத்தை வெளிப்படுத்தினார்.

இதனால், சிங்கப்பூர் அரசு இத்தகைய குற்றங்களை கடுமையாக கையாள்கிறது. 2020-ம் ஆண்டு முதல், தண்டனைச் சட்டத்தில் பிரிவு 377BB சேர்க்கப்பட்டு, வோயரிசம் குற்றங்கள் பாலின பாகுபாடு இல்லாமல் தண்டிக்கப்படுகின்றன. இதற்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts