TamilSaaga

“சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : பெருந்தொற்று பூட்டுதலில் தொடரும் வாழ்க்கை – கண்ணீர் கதைகள்

உருத்தெரியாமல் உலகையே உலுக்கிப் போன பெருந்தொற்று ஏறக்குறைய எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கில்லை என்றாலும் நோய் அதிகம் பரவியதும், பாதிக்கப்பட்டதும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் (அதிக நெருக்கத்தில் என்றும் சொல்லலாம்) வாழக்கூடிய Dormitory எனும் தங்குமிடங்கள் என்பதுதான் இந்த செய்திக்கு காரணம்.

பெருந்தொற்று பரவிய 2020ம் ஆண்டில் பிற்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களில், ஏறக்குறைய 60 சதவீதம் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் தங்கும் இடங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட அந்த நாள் முதல், புலம்பெயர் தொழிலாளர்க்கான தரம் உயர்த்தப்பட்ட வசதியான தங்கும் இடங்களை கட்டித் தருவதற்காக, அரசே முதல் முயற்சி எடுத்திருக்கும் இந்த நாள் வரை, இந்த பெருந்தொற்று காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிங்கப்பூர் ஆற்றிய அனைத்துமே உலகளாவிய பாராட்டை பெற்றுள்ளன.

அந்த நற்பெயர், புகழ் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் படியான, சில உள்நாட்டு நிலவரங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது BBC யிடம் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் பதிவு செய்துள்ள குற்றசாட்டுகள்.

பெருந்தொற்று தொடங்கி, தொடர்ந்து பரவி, உச்சம் தொட்டு, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வீரியத்தை குறைத்துள்ள இன்று வரை, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. தொற்றின் தொடக்கத்தில் பரவுதலைக் கட்டுப்படுத்த, கட்டடங்களுக்குள், தீவிர கட்டுப்பாடுகளுக்குள் வாழ அறிவுறுத்தப்பட்ட ஏறக்குறைய 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள், இவ்வளவு நாட்கள் கடந்த பின்பும், இன்றும் அந்த கட்டுப்பாட்டுச் சிறைகளுக்குள் இருந்து வெளிவரவில்லை என்பது, மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் தரக்கூடிய ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று லட்சம் தொழிலாளர்கள்- ஒன்றரை ஆண்டுகள்- பணியிடம் தவிர வேறு எங்கும் நடமாட அனுமதிக்கப்படாத அவலம் – எப்படி சாத்தியம் ஒரு சாதாரண தனிமனிதரால்? சரி இப்போது தான் தொற்று குறைய ஆரம்பித்துவிட்டதே? அவர்களை வெளியில் விடலாமே? என்ற கேள்விக்கு பதிலாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் தான் ‘Pilot Scheme’. என்ன இது?

ஏறக்குறைய நூறு புலம்பெயர் தொழிலாளர்கள், முதல் முறையாக அவர்கள் தங்கும் இடங்களை விட்டு, 5 மணிநேரம் ‘லிட்டில் இந்தியா’ பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள தொழிலாளர்களை, குறிப்பிட்ட இடங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும், அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் தங்கும் இடங்களுக்கு கொண்டு வந்து விடுவது தான் அந்த ‘Pilot Scheme’

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து சிங்கப்பூரில் வேலை செய்யும் சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய கருத்துக்களை BBC செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்துள்ளார்.

ஷரிப், பங்களாதேஷிலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமுற்ற தன் மனைவியை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்தவர். அன்று முதல் தனக்கென ஒரு வாழ்க்கையை அங்கேயே அமைத்துக் கொண்ட இவர்,’ 2020 தொடக்கத்தில் இருந்து தனக்குத் தெரிந்ததெல்லாம், தான் தங்குமிடத்தின் நான்கு சுவர்களும், தான் வேலை செய்யும் கட்டுமானத் தளமும் மட்டும்தான். இது ஒரு சிறை வாழ்க்கை – ஒரு கைதியின் வாழ்க்கை. இவர்கள் Pilot Scheme பற்றி பெரிதாகப் பேசினாலும், குறிப்பிட்ட நேரம் மட்டும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சென்று வருவது என்ன பெரிய சலுகை !?’ என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார். Pilot Scheme க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் இவர் இல்லை என்றாலும், தன்னை வேலைக்கு அழைத்துச் செல்ல வரும் லாரியின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாத நகர மக்களைப் பார்க்கும்போது,’ அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருக்கும் போது, தான் மட்டும் ஏன் இப்படி அடைத்து கிடக்க வேண்டியுள்ளது?’ என்று வேதனையாக இருப்பதாக BBC யிடம் காணொளி வழியாக பதிவு செய்துள்ளார்.

‘அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வெளியே உண்கின்றார்கள், கடைகளுக்கு செல்கின்றார்கள், நண்பர்களை சந்திக்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி ஓர் ஆண்டுக்கு மேலாக அடைபட்டு கிடக்கிறேன்!? நானா பெருந்தொற்றை உண்டாக்கினேன்!? பரப்பினேன்?!’ என்னும் நியாமான கேள்வியையும் பதிவு செய்கிறார் ஷரிப்.

வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் தன் படுக்கையில் செலவழிப்பது என்பது எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதை யாரும் பதிவு செய்யாமலே ஒவ்வொரு மனிதராலும் புரிந்து கொள்ள முடியும்.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக உலகில் மிக நீண்ட தனிமைப்படுத்துதல் துன்பத்தை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சூழல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொரு புறமோ மனிதவள அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த ‘Pilot Scheme’ ஒரு ‘மைல்கல்’ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். வெளியில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில் இருவரை BBCக்கு பேட்டி கொடுக்க வைக்கிறார். அவர்களும் அமைச்சகம் தங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு தாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

தொற்றுநோய் பரவல் அதிகம் இருந்த காலத்தில், கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருந்த போதிலும் கூட, சிங்கப்பூரில் எந்த ஒரு ஆரோக்கியமான மனிதரும் வீட்டை வெளியேற தடை விதிக்கப்படவில்லை.
ஆனால் Dormitory-களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள்.

‘புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் இணைந்து வாழ்வதும், அவர்களின் வேலைகளின் சூழலும் அவர்களுக்கு அதிக அளவில் மொத்தமாக தொற்றினை உருவாக்கக்கூடிய ஆபத்துக்கு உள்ளாக்கி விடும்’ என்று கடந்த பிப்ரவரியில் தெரிவித்தார் சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டாக்டர் ட்டான் சீ லெங். ஆனால் இன்றும் தொடரும் இந்த கட்டுப்பாடுகள் குறித்து அவரோடு BBC பேச முயன்றபோது அதை நிராகரித்துவிட்டார் டாக்டர் டான். அதற்கு பதிலாக மனித வள அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “எங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை தங்குமிடங்களில் வைத்திருப்பதற்குக் காரணம், அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், தொற்று பரவும் அபாயத்தை குறைப்பதற்காகவும் மட்டுமே” என்று அறிக்கை வெளியிடுகிறார்.

ஆனால் ஷரிப் போன்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மனதில் சிங்கப்பூர் மக்கள் எல்லாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்!. அவர்கள் எல்லாம் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது! நம்பப்படுகிறது! என்றால் ஏன் எங்களால் அது முடியாதா?

எங்களுக்கு மட்டும் ஏன் தனிச் சட்டங்கள்!? நாங்கள் மனிதர்கள் இல்லையா!? நாங்கள் என்ன மிருகங்களா?! எங்களுக்கு எதுவும் புரியாதா? நாங்கள் என்ன அந்த அளவுக்கு கூடவா அறிவில்லாதவர்கள் !? என்னும் கேள்விகள் ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் – இல்லையா?

“புலம்பெயர் தொழிலாளர்கள் என்றாலும், நாங்கள் உழைத்தது எல்லாம் உங்களுக்காக, உங்கள் நாட்டுக்காகத்தானே! நாங்கள் உருவாக்குகிற, நாங்கள் செய்கிற எல்லாமே உங்களுக்காகத்தானே ! நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள் தானே ! சமூகத்தில் எல்லாரையும் போல எங்களுடைய மாண்பும் மதிக்கப்பட வேண்டும்!” என்று கொதித்துப் போகும் டஸ்ரிப்பின் வார்த்தைகள் நாம் குறிப்பிட்டுள்ளது போலவே அவர்களின் தனிமைப்படுத்துதல் வலியைத் தெளிவாக பதிவு செய்கிறது.

தங்குமிடங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் சமீபத்திய நிலை பற்றி கேட்டதற்கு மனிதவள அமைச்சகம் கருத்து சொல்ல மறுத்துவிட்டது. அதே சமயம் , ‘கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்களின் மனநிலை குறித்து தாங்கள் விழிப்போடு இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொற்றின் பெயரால் தொடர்ந்து பல மாதங்களாக சிறைச்சாலை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மனநிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய ஒரு கட்டாய சூழல் எழுந்துள்ளது. தங்குமிடங்களில் வசிக்கிறார்கள், எனும் ஒரே காரணத்துக்காக சிங்கப்பூர் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் இன்றி கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டிய கொடுமை விரைவில் கலைக்கப்பட வேண்டும்

‘சிங்கப்பூர் உருவாக்கப்பட்டிருப்பது புலம்பெயர் தொழிலாளர்களின் உதவியால்தான். எனவே அவர்கள் நலனில் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது’ என்று அறிக்கை கொடுத்த அரசு, அந்த அக்கறையை கொஞ்சம் சுதந்திரத்தில், தளர்வுகளில் காட்டுமானால் நன்றாக இருக்குமே என்பதுதான் எல்லாரின் எதிர்பார்ப்பும்… காலம் விரைவில் கைகூடட்டும்.

Related posts