பொருளாதாரத்தில் முன்னேறி விடலாம் என்ற எண்ணத்தில் தான் பல ஆண்களும் குடும்பத்தினை பிரிந்து வெளிநாட்டு வேலைக்கு செல்கின்றனர். மொழி தெரியாத நாட்டில் குடும்பத்தினை பிரிந்த கஷ்டத்தினை பொருட்படுத்தாமல் ஒரு ரூபாயிற்கு கூட கணக்கு பார்த்து உழைத்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு அந்த நாட்டிலேயே வாழ்க்கை முடிந்தும் விடுகிறது. அப்படி ஒரு சம்பவத்தில் இறந்தவரிடன் மொத்த குடும்பமும் அவரின் கடைசி உடலையாவது பார்த்து விட வேண்டும் என கதறி கொண்டு இருப்பது பார்ப்பவரை கலங்கடித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த 36 வயதாகும் சுரேஷ் கடந்த வருடம் புரூணையில் இருக்கும் கட்டுமான நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். மனைவி ராஜலெட்சுமி மற்றும் இரு குழந்தைகளை எப்படியாவது கஷ்டத்தில் இருந்து மீட்டு நல்ல வாழ்க்கையை கொடுக்கலாம் என்பதே சுரேஷின் எண்ணமாக இருந்து இருக்கலாம்.
இந்த வேலை குறித்து தெரிந்தவுடன் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஏகப்பட்ட கடனை வாங்கி கொண்டு புரூணை கிளம்பி இருக்கிறார். வேலைக்கு சென்ற இடத்தில் சுரேஷிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அவரை அங்கிருந்தவர்கள் 16.9.2022ல் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்ததாக மனைவி ராஜலெட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சுரேஷிற்கு காய்ச்சல் குணமாகாமல் திடீரென கோமா நிலைக்கு சென்று இருக்கிறார். இந்த தகவலும் அவருக்கு கம்பெனி மூலம் கிடைத்துள்ளது. கணவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள நினைத்த ராஜலெட்சுமி அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து முறையிட்டு இருக்கிறார். ஆனால் அவர்களோ இல்லை சிகிச்சையில் இருப்பவர்களை அழைத்து வருவது சரியாக இருக்காது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர்.
கணவர் உடல்நிலை தேறிவிடுவார் என நினைத்துக்கொண்டிருந்தவருக்கு இடியாக ஒரு செய்தி கடந்த டிச.25ந் தேதி வந்திருக்கிறது. கோமாவில் இருந்த சுரேஷ் இறந்துவிட்டதாக கூறப்பட்டு இருக்கிறது. உயிருடன் தான் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டி அவர் உடலையாவது இந்தியாவிற்கு எடுத்து வர உத்தரவிடுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார்.
அவரின் மனுவினை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆணையருக்கு அனுப்பப்பட்டாலும் எந்த பதிலும் கிடைக்காததால் குடும்பம் கவலையில் இருக்கின்றனர்.
சிகிச்சையில் சுரேசை அனுமதித்த அவரின் முதலாளியோ முதலில் செலவுகளை பார்த்து கொள்வதாக கூறி இருக்கிறார். ஆனால் தற்போது மருத்துவ செலவு 24 லட்ச ரூபாயை தாண்டி விட்டது. என்னிடம் தற்போது இவ்வளவு பெரிய தொகை கிடையாது. அதனால் பணம் கிடைத்தால் சுரேஷின் உடலை வாங்கி அனுப்புகிறேன். இல்லை நீங்க காசு கொடுங்க. வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே பொருளாதார பிரச்னையை சரி செய்ய வெளிநாடு சென்ற கணவருக்காக இத்தனை லட்சத்தினை பிரட்ட முடியாத நிலையில் கலங்கி நிற்கிறார் மனைவி ராஜலெட்சுமி.
10 நாட்களுக்கு மேல் ஆகியும் கணவரின் கடைசி உடலையாவது பார்த்து விடலாம் என கவலையில் இருக்கும் சுரேஷின் மனைவி, பிள்ளைகளுக்காக தமிழ்நாட்டு அரசு இதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.