சிங்கப்பூரில் காவல்நிலையத்திற்கு முதலில் புகார் அளிக்க சென்ற ஒரு நபர், பின்னர் கையில் இருந்த குழந்தையை அதிகாரிகளிடம் வீசிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விபத்து குறித்து புகார் அளிக்க கடந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி அந்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த நபர் ஏற்கனவே சிறுநீர் பரிசோதனைக்கு அறிக்கை செய்யத் தவறியதற்காக போலீசாரால் தேடப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் போலீசாரால் தேடப்படுவதை உணர்ந்த அந்த நபர் உடனடியாக தனது கையில் இருந்த இரண்டு மாத குழந்தையை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மேல் வீசிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் ‘gag’ உத்தரவுகளால் பெயரை வெளியிடமுடியாத அந்த 40 வயது நபருக்கு இன்று திங்கள்கிழமை (ஜூலை 26) 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்தல், மேற்பார்வை உத்தரவின் கீழ் சிறுநீர் பரிசோதனைக்கு தன்னை முன்வைக்கத் தவறியது மற்றும் தன்னுடன் நெருங்கிய உறவில் இருந்த ஒருவருக்கு தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்திய என்று மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.