உலகின் அரிய இரத்த வகை என்று சொல்லக்கூடிய தங்க இரத்த வகை மலேசிய பெண் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
செய்திக்குள் போகும் முன் –
எல்லா இரத்தமும் சிவப்பு, எல்லா வியர்வையும் கரிப்பு என சமூக சமத்துவத்திற்கு அடையாளமாக நாம் எப்போதும் குறிப்பிடக் கூடியவைகளில் மிக முக்கியமானது இரத்தம். அந்த இரத்தத்திலும் கூட தங்க வகை என்று சொல்லக்கூடிய ஒரு அரிய வகை இருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இல்லையா ?!
அது என்ன தங்க இரத்த வகை? மற்ற வகைகளை விட இது எந்த விதத்தில் உயர்ந்தது ?
எதற்காக இதற்கு தங்க வகை என்று பெயர் ? என்பது குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை தெரிந்துகொண்டால் எளிதாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : சரமாரியாக தாக்கிக்கொண்ட இருவரால் பதட்டம் – இருவரும் கைது
எல்லாருடைய இரத்த சிவப்பணுக்களின் மேற்பகுதியிலும் Rh புரதம் என்று சொல்லக்கூடிய Rhesus புரதம் இருக்கிறது .இரத்த செல்களில் இந்த புரதம் இருந்தால் Rh Positive என்றும், இரத்த செல்களில் இந்த குறிப்பிட்ட புரதம் இல்லையென்றால் அவர்கள் Rh Negative என்றும் சொல்லப்படுகிறார்கள். ஆனால் பெரும்பான்மை இரத்த வகைகள் எல்லாம் Rh Positive தான்.
இந்த Rh புரதம் தான் தங்க இரத்த வகையும் வேறுபடுத்தி காட்டுகிறது . தங்க இரத்த வகை என்பதும் இந்த Rh புரதம் எதுவும் இல்லாத இரத்த வகை தான் ஆனால் Rh Negative இரத்த வகையில் D என்னும் ஒரு Rh பிரிவு புரதம் மட்டும் இருக்கும்.இந்த தங்க இரத்த வகையில் அதுவும் இருக்காது அதனால்தான் இது Rh Null இரத்த வகை என்று குறிப்பிடப் படுகிறது.
முதல் முதலாக இந்த Rh Null – தங்க இரத்த வகை 1961 ல் ஆஸ்திரேலிய பழங்குடி பெண்ணிடம் கண்டறியப்பட்டது.உலகத்தில் இதுவரை இந்த Rh null என்ற தங்க இரத்த வகை மொத்தம் 43 பேரிடத்தில் மட்டுமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே தான் இது மிகவும் அரிய வகை இரத்தப் பிரிவாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான இரத்தவகை கொண்ட நபர்களின் பட்டியலில் சமீபத்தில் மலேசியாவின் டெரங்கானு பகுதியில் உள்ள பெண் ஒருவர் இணைந்திருக்கிறார்.
டெரங்காணு இரத்த வங்கி தனது முகநூல் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளது.மலேசியாவில் தங்க இரத்த வகை கொண்ட ஒரே நபர் இவர் தான் என்பதையும் அந்த பதிவு சுட்டிக் காட்டியுள்ளது.மலேசியாவில் இணையத்தில் இந்த செய்தி பரவலாக பேசப் பட்டு வருகிறது.