TamilSaaga

ஏப்ரல் மாதம் முழுவதும் லிட்டில் இந்தியாவில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் – மிஸ் பண்ணாதீங்க!

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா, இந்திய கலாச்சார விழாவையும் தமிழ்ப் புத்தாண்டு 2025-ஐயும் வெகு விமரிசையாகக் கொண்டாடத் தயாராகிவிட்டது. லிட்டில் இந்தியக் கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா) இணைந்து ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு கலை, கலாச்சார மற்றும் உணவு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

விழாவின் முக்கிய அங்கமாக, தமிழ்மொழி மாதம் 2025 ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாதத்தில் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 60 இளையர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் சிராங்கூன் சாலையில் தொங்கவிடப்படவுள்ளன.

இந்தியாவின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான உணவு வகைகளை அறிந்துகொள்ளவும், அவற்றை ருசிக்கும் வாய்ப்பை வழங்கும் விதமாக, பாரம்பரிய உணவுப் பாதை நிகழ்ச்சி ஏப்ரல் 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் நான்கு முன்னணி இந்திய உணவகங்கள் பங்கேற்று தங்கள் பாரம்பரிய உணவு அனுபவத்தை வழங்கவுள்ளன.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

தமிழ்ப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் உள்ளடக்கிய கலை விழா ஏப்ரல் 12ஆம் தேதி அரங்கேறவுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக, பங்களாதேஷ், குஜராத், கன்னடம் உள்ளிட்ட 15 இந்திய சமூகங்களின் பாரம்பரியம் குறித்த கண்காட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. தொடர்ந்து, இந்த சமூகங்களின் பாரம்பரிய நடனங்களை உள்ளடக்கிய இந்திய கலாச்சார விழா நிகழ்ச்சி ஏப்ரல் 13ஆம் தேதி மேடையேறவுள்ளது. இந்த நடன நிகழ்ச்சி லிஷா பெண்கள் பிரிவினரால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேக்கா பிளேஸ் வளாகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி இந்திய பாரம்பரிய உடைகளை காட்சிப்படுத்தும் பேஷன் ஷோ ஒன்றும், பிரபல சமையல் கலைஞர் அரிப்பின் பங்கேற்புடன் கூடிய சமையல் பட்டறை ஏப்ரல் 26ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

 

வெளிநாட்டு பணிப்பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 27ஆம் தேதி ‘என்டியுசி @ ஒன் மெரினா போலிவார்டு’ வளாகத்தில் யோகா நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பணிப்பெண்கள் தங்கள் முதலாளிகளுடன் இணைந்து கலந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் MRT: 6 முக்கிய வழித்தடங்களின் முழுமையான சேவை வழிகாட்டி…..

இந்திய கலாச்சார விழா மற்றும் தமிழ் புத்தாண்டு 2025 குறித்த மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் www.lisha.sg என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Related posts