சிங்கப்பூரில் வேலை காலியிடங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் வளர்ச்சித் துறைகளில் மனிதவளத் தேவை ஆகியவை சிங்கப்பூரில் உள்ள வேலை காலியிடங்களை கடந்த ஜூன் மாதத்தில் 92,100 என்ற மிக உயர்ந்த உச்சத்திற்கு சென்றுள்ளதாக மனிதவள அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் ஒவ்வொரு 100 வேலையில்லாத நபர்களுக்கும் 163 வேலை வாய்ப்புகள் இருந்தன. மார்ச் 2019க்குப் பிறகு முதல் முறையாக வேலைவாய்ப்பற்றவர்களுக்கான வேலை காலியிடங்களின் விகிதம் ஒன்றுக்கு மேல் அதிகரித்துள்ளது. இவை பருவகாலமாக சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள். “தற்போதைய எல்லை கட்டுப்பாடுகள் கட்டுமானம் மற்றும் உற்பத்தியில் மனிதவளம் கடுமையாக பாதித்துள்ளது” என்றும் MOM தெரிவித்துள்ளது.
அதேபோல் நீண்டகால வேலையின்மை விகிதம், கடந்த ஆண்டு.. அதாவது 2020 டிசம்பர் மற்றும் 2021 மார்ச் மாதத்தில் 1.1 சதவீதமாக இருந்தது. இப்போது, ஜூன் மாதத்தில் அது 0.9 சதவீதமாக குறைந்துள்ளது.
“நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள், தொழில்முறை சேவைகள் மற்றும் தகவல் மற்றும் தகவல்தொடர்புகள் போன்ற வளர்ச்சித் துறைகளில் நீடித்த தேவை இருந்தது”. இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் உள்ளூர் வாசிகள் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருவதாக, MOMன் இரண்டாம் காலாண்டு தொழிலாளர் சந்தை அறிக்கை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா மற்றும் விமானம் தொடர்பான துறைகளும் கோவிட் -19ல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மெதுவான விகிதத்தில் மீண்டு வருகின்றன என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.