சிங்கப்பூரில் கடந்த மாதம் ஜனவரி 29 அன்று அதிகாலை 4.45 மணிக்கு, பிளாக் 39 தெலுக் பிளாங்கா ரைஸில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தீயில் சிக்கி காயமடைந்த 48 வயது பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிஇதுகுறித்து கிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
SCDF வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு SCDF சென்றபோது, அந்த குடியிருப்பு பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த குடியிருப்பின் 10 வது மாடியில் உள்ள ஒரு வீடு முழுவதுமாக தீக்கிரையானதாகவும் கூறப்பட்டது.
அந்த தீயை அணைத்ததில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி லெஃப்டினென்ட் கங்காதேவி ரௌட்டன் முக்கிய பங்காற்றினார். தீ ஏற்பட்ட இடத்தை அடைந்ததும், புளோக்கின் 10வது மாடியிலிருந்து ஆரஞ்சு நிறத்தில் தீப்பிழம்புகள் ஆக்ரோஷமாக வெளியானதை கங்காதேவி பார்த்தார். தீயின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கண்ணாடி மற்றும் கான்கிரீட் துண்டுகள் தெறித்து கீழே விழுந்தன.
இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள அலெக்சாண்டிரா தீயணைப்பு நிலையத்தின் துணைப் படைப் பிரிவின் தலைவரான 35 வயது லெஃப்டினென்ட் கங்காதேவி, “எனது 15 ஆண்டு தீயணைப்பு அனுபவத்தில் நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய தீ விபத்து சம்பவம் இதுதான். அந்த வீட்டில் தீ கொழுந்துவிட்டெறிந்தது. ஆனால், நான் வீட்டுக்குள் செல்ல பயப்படவில்லை. அதேசமயம் அங்கே வெப்பம் மிக மிக அதிகமாக இருந்தது. அந்தத் தீயில் எனது உடல் உருகுவதுபோல நான் உணர்ந்தேன். இப்படியொரு வெப்பத்தை நான் அனுபவித்ததில்லை” என்றார்.
அந்த இக்கட்டான நேரத்தில், தனது மொபைலைப் பார்த்த கங்காதேவி, தமது 12, 10 வயது மகள்கள் தனக்கு பலமுறை Call செய்திருந்ததை அறிந்தார். அம்மாவுக்கு அந்த ஆபத்தும் நேரவில்லை என்பதை உறுதி செய்வதற்காக மகள்கள் அடிக்கடி மொபைலில் அழைத்திருக்கின்றனர். கங்காதேவியின் கணவரும் ஒரு தீயணைப்பு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேலும் பேசிய கங்காதேவி, “இந்த தீயணைப்பு பணிக்கு பிறகு நான் எனது வீட்டிற்கு சென்றதும், எனது குடும்பத்தினர் எனக்குப் பாலும் நீரும் கொடுத்தனர். என் இளைய மகள் எனது கை கால்களைப் பிடித்துவிட்டு நான் நலமாக இருக்கிறேனா என்று என்னிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார். பிறகு நான் அவர்களிடம் தீயை அணைத்து பொது மக்களை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தினேன்” என்றார்.
தீரமுடன் செயல்பட்டு டெலோக் பிளாங்கா ரைஸில் ஏற்பட்ட தீ விபத்தை முடிந்த வரை விரைவாக அணைத்த கங்காதேவிக்கு நாமும் சல்யூட் வைக்கலாம்.