சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகள் வழியாக வரும் மே 8 முதல் 13 வரை வெசாக் தின விடுமுறையை முன்னிட்டு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலையும், நீண்ட காத்திருப்பு நேரத்தையும் சந்திக்க நேரிடும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoints Authority – ICA) தெரிவித்துள்ளது.
வரும் மே 12, 2025 அன்று வெசாக் தினம் (Vesak Day) கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த நீண்ட வார இறுதி விடுமுறையில் அதிகமான பயணிகள் மலேசியாவுக்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:
- இந்த காலகட்டத்தில் நெரிசலைத் தவிர்க்க பயணிகள் எல்லை தாண்டிய பேருந்து சேவைகளைப் பயன்படுத்த பரிசீலிக்கலாம்.
- பேருந்து இயக்கப்படும் நேரம் மற்றும் அட்டவணையை Land Transport Authority-ன் MyTransport.SG செயலி அல்லது பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
- வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், இரண்டு நில எல்லை சோதனைச் சாவடிகளிலும் உள்ள போக்குவரத்து நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் பாஸ்போர்ட்டுக்கு பதிலாக QR குறியீடுகளைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாக முடிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சிங்கப்பூர் தேர்தல் 2025: மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியில்; மோடி, ஸ்டாலின் வாழ்த்து!
சமீபத்தில் மே 3 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க மலேசியாவுக்கு கார் மூலம் சென்ற சிங்கப்பூரர்கள், Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகளில் ஐந்து மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஏப்ரல் 17 முதல் 21 வரை நடைபெற்ற புனித வெள்ளி நீண்ட வார இறுதியில் 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த இரண்டு சோதனைச் சாவடிகள் வழியாக சென்று வந்துள்ளனர். விடுமுறையின் முதல் நாளில் மட்டும் 5 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது கார் மூலம் சோதனைச் சாவடிகளைக் கடந்தவர்கள், மலேசியாவில் இருந்து வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிகபட்சமாக மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
எனவே, வெசாக் தின விடுமுறையில் மலேசியா செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பரிசீலிப்பது நல்லது. முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுவதும், QR குறியீடுகளைப் பயன்படுத்துவதும் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க உதவும்.