ஆண்ட்ரூ கோஸ்லிங் என்ற ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் வசித்துவந்துள்ளார். அப்போது அவர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து மது பாட்டிலை கீழே வீசிய நிலையில் அது அங்கு நின்றுகொண்டிருந்த 73 வயது நபர் மீது பலமாக தாக்கியுள்ளது, இந்த விபத்தில் அந்த முதியவரும் பரிதாபமாக இறந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அந்த ஆஸ்திரேலியா நாட்டவருக்கு சிங்கப்பூரில் 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதாகும் கோஸ்லிங் என்ற அந்த ஆஸ்திரேலியர், சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்து ஒரு மாதமாக தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின்போது அந்த நபர் குடித்துவிட்டு முஸ்லீம் சமூகத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை பேசிவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Today செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி அவருடைய மத விரோத பேச்சுக்கள் அதிகரித்த நிலையில், அதன் விளைவாக Spottiswoode Apartmentன் 5வது மாடியில் தங்களது புதுமனைப்புகு விழாவை கொண்டாடி வந்த ஒரு மலாய் இஸ்லாமிய குடும்பத்தை நோக்கி மது பாட்டிலை தூக்கி எறிந்துள்ளார் அந்த நபர்.
அந்த மது பாட்டில் அங்கிருந்த 73 வயதான (டெலிவரி டிரைவர்) நசியாரி சுனி என்பவரை தாக்க, அவர் பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் அருகில் இருந்த அவரது மனைவி 69 வயதான மனிசா சித்ரியையும் இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தபோது, புதுமனைப்புகு விழா கொண்டாடிய குழுவை நோக்கி சுட “துப்பாக்கி போன்ற” ஆயுதத்தை பயன்படுத்த நினைத்ததாக திடுக்கிடும் தகவல்ஒன்றை அவர் கூறினார்.
ஆனால் அது ஒரு “கொடூரமான” செயல் என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். வேலை தேடி வந்த இடத்தில் தேவையற்ற செயலில் ஈடுபட்டு இன்று ஒரு உயிரை கொன்றது மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையையும் கேள்விக்குறியாகியுள்ளார் அவர்.