சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த கோர விமான விபத்து, அந்நாட்டை தாண்டி உலகையே உலுக்கியுள்ளது. அஹமதாபாத் நகரில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த 240 பேர் இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருக்கை எண் 11Aவில் பயணித்த அந்த ஒரு பயணியை தவிர, ஒட்டுமொத்தமாக அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே இன்று வெறும் நினைவுகளாக மாறியுள்ளனர்.
அரசு வேலையால் மாறிய வாழ்க்கை
இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாயை, இழப்பீட்டு தொகையாக அறிவித்துள்ளது TATA நிறுவனம். இந்த சூழலில் விமான விபத்தில் சிக்கி இறந்த ஒரு பெண்மணி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அந்த பெண், கடந்த சில ஆண்டுகளாக லண்டன் நகரில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், அவருக்கு இந்தியாவில் அரசாங்க வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் அரசு வேலையில் சேர, லண்டன் சென்று அங்குள்ள தனது பணியில் இருந்து விலக முடிவு செய்து பயணித்த அந்த பெண் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்?
கடந்த 2022ம் ஆண்டு விஸ்தாரா விமான சேவை நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதன் பிறகு இன்றைய தேதியில், நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தின் 25.1 சதவிகித பங்குகளை பெற்று, ஒரு முன்னணி பங்குதாரராக விளங்கி வருகிறது. மேலும் ஏர் இந்தியா விமான விபத்து நடந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று SIAவின் பங்குகள் 2.2 சதவிகிதம் அளவிற்கு சரிவை சந்தித்தும் குறிப்பிடத்தக்கது.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்: தண்ணீரில் தத்தளித்த ஆடவர் – கடலோரக் காவல் படை அதிரடி மீட்பு!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் விசாரணை?
கடந்த 1932ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடாவால் நிறுவப்பட்டு, அதன் பிறகு 1953ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனம் தான் ஏர் இந்தியா. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு மீண்டும் டாடா குழுமத்தால் ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்டது. இந்த சூழலில் தான், SIAவின் விஸ்தாராவின் பங்குகள், புதிய ஏர் இந்தியா குழுமத்தில் 20 சதவீதமாக இணைந்தது.
அதை தொடர்ந்து, SIA மேலும் 5.1 சதவிகித பங்குகளை சுமார் S$360 மில்லியனுக்கு வாங்கியது. ஆகவே இன்றைய தேதியில் ஏர் இந்தியாவின் 25.1 சதவிகித பங்குகள் SIA வசம் உள்ளது. இதனால் இந்த கோர விமான விபத்து குறித்த விசாரணை துவங்கியுள்ள நிலையில், SIAவிடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.