TamilSaaga

“மூணு மாசமா சம்பளமே கொடுக்கல”… சிங்கப்பூரில் லாரியை நிறுத்தி “Entrance”-ஐ மறித்த 9 வெளிநாட்டு ஊழியர்கள்! சிங்கையில் இதுவரை எந்த ஊழியரும் செய்ய நினைத்துக் கூட பார்க்காத சம்பவம்!

SINGAPORE: சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை (அக் 18) பிற்பகல் ஆங் மோ கியோவில் (Ang Mo Kio ) உள்ள ஒரு கட்டிடத்தின் நுழைவாயில் (Entrance) மற்றும் வெளியேறும் பகுதி (exit) ஆகிய இரண்டு பகுதிகளையும் தடுத்து போராட்டம் நடத்திய கூறப்படும் ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று மதியம் 1.50 மணியளவில், 5 ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 62-ல் இருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

இதில், 28 முதல் 54 வயதுக்குட்பட்ட நபர்கள், தங்களுக்கு சம்பளம் கோரி பலகைகளை ஏந்திக் கொண்டே கட்டிடத்தின் நுழைவாயிலையும், வெளியேறும் பாதையையும் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்த நபர்களிடம் போராட்டத்தை உடனே நிறுத்துமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து, “அனுமதியின்றி ஒரு பொதுக் கூட்டத்தை கூட்டிய குற்றத்திற்காக அவர்கள் அனைவரையும் போலீசார் விசாரித்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து CNA ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “Zhengda Corporation எனும் நிறுவனத்தின் ஊழியர்களே இந்த செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. ஊதிய பிரச்சனை தொடர்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று மனிதவளத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, சிங்கப்பூரின் Tripartite Alliance for Dispute Management (TADM) நிர்வாகமும் அந்த ஊழியர்களிடம் பேசியது. இந்த ஊதிய சிக்கல் தொடர்பாக மனித வளத்துறை மற்றும் TADM அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்த பிறகு, அந்த ஊழியர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் Dormitories-களுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், THE STRAITS TIMES ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம், தமிழக ஊழியரும் இந்த மறியலில் பங்கேற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதாவது, ஆங் மோ கியோவில் (Ang Mo Kio ) உள்ள NCS Hub கட்டிடத்தின் நுழைவு வாயிலில் ஒரு லாரியை நிறுத்தி போக்குவரத்தை தடுத்துள்ளனர். இதனை, அந்த நேரத்தில் மதிய உணவு சாப்பிட வெளியே வந்த database administrator-ஆக பணிபுரியும் முரளி என்பவர் உறுதி செய்துள்ளார்.

38 வயதான முரளி, ஒரு பாதுகாப்பு அதிகாரி அந்த டிரக்கின் புகைப்படங்களை எடுப்பதையும், ஐந்து பேர் சீன மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றதையும் பார்த்ததாகக் கூறினார். அவர்களைச் சுற்றி சுமார் 20 NCS ஊழியர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, “என்ன நடக்கிறது என்று (ஐந்து பேருடன்) உடன் நின்ற மற்றொரு கட்டுமானத் தொழிலாளியிடம் நான் தமிழில் கேட்டதற்கு, “மூன்று மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்று கூறியதாக முரளி தெரிவித்துள்ளார். இதனால், தமிழக ஊழியர்களும் இந்த செயலில் ஈடுபட்டார்களா என்று சந்தேகிக்கப்படுகிறது.

“சிங்கப்பூரில் காவல்துறை அனுமதியின்றி பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது அல்லது பங்கேற்பது சட்டவிரோதமானது மற்றும் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பதை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது” என்று SPF தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு அந்த ஊழியர்களுக்கு S$3,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

Related posts