TamilSaaga

7 கட்டமாக நடைபெறும் தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை – முழு விவரம்

சிங்கப்பூரில் இன்று முதல் தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. சென்ற ஆண்டைப் போலவே தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையானது இணைய வழியிலேயே நடைபெற்று வருகின்றது.

ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கின்ற இந்த மாணவர் சேர்க்கையில், முதற்கட்டமாக ஏற்கனவே பள்ளியில் பயிலும் மாணவர்களின் உடன்பிறந்தோருக்கான சேர்க்கை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையின் கீழ் பதிவு செய்யும் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளிகளில் இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

மேலும் தங்களுடைய பிள்ளைகளுக்காக பதிவு செய்ய விரும்பும் பெற்றோர்கள் இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த குழந்தையின் மூத்த சகோதரி அல்லது சகோதரர் படிக்கும் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டும். மேலும் சேர்க்கை விவரங்களை பள்ளி தாமாகவே வழங்கும். இந்நிலையில் நாளை மாலை 4:30யுடன் முதற்கட்ட மாணவர் சேர்க்கை நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக 2A1 கட்ட மாணவர் சேர்க்கை ஜூலை 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கும். இந்தக் கட்டம் பள்ளிகளில் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினராக இருப்பவர்களின் அல்லது பள்ளி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அல்லது நிர்வாக குழுவில் இருப்போரின் பிள்ளைகளுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 2A2 மாணவர் சேர்க்கை ஜூலை 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும். இதில் பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தோர் பள்ளிகளில் முன்னாள் மாணவர்களாக இருக்க வேண்டும். அல்லது பெற்றோர் பள்ளி ஊழியராக பணியாற்றவேண்டும்.

பள்ளிகளில் தொண்டு ஊழியர்களாக பணியாற்றும் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுடன் இணைந்து தேவாலயங்கள் அல்லது குலமரபு சங்கங்களின் உறுப்பினர்கள் சமூக தலைவர்களாக இருப்போரின் குழந்தைகளுக்கான 2B கட்ட மாணவர் சேர்க்கை ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts