அம்மா நான் போய்ட்டு வரேன்னு சொல்லி வெளிநாடுகளுக்கு வேலைக்கு கெளம்பர நம்ம மக்கள், சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள்னு பல இடங்கள்ல வேலை பாக்கறாங்க!
இன்றும் கூட பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு போய் வேலை செஞ்சு தங்கள் குடும்ப நிலையை ஒரு படி மேல கொண்டுவரனும்னு கனவுகளோட இருந்துட்டு தான் இருக்காங்க!
அப்படி கனவுகளோடு உள்ள மக்களுக்கு தான் இந்த பதிவு!
சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று! உலகின் விலைஉயர்ந்த நகரம், சிட்டி ஆஃப் லயன்-னு பல பெயர்கள் இதுக்கு உண்டு! அதே போல பொருளாதாரத்துலயும், உள்கட்டமைப்பு வசதிகள்லயும் அதீத வளர்ச்சியும் உள்ள நாடு! அங்க பெரும்பான்மையான மக்கள் நம்ம இந்தியாவைச் சார்ந்தவங்களா இருப்பாங்க. இன்னும் குறிப்பா சொல்ல போனா நம்ம தமிழ் மக்கள் ஏராளமானோர் அங்க வசிக்கறாங்க. வேலை நிமித்தமா அல்லது தொழில் நிமித்தமா அந்த நாட்டுக்கு போனவங்க பல பேர்!
அவங்க எப்படி போனாங்க? அந்த நாட்டுக்குள்ள நுழைய விசா குறித்து என்னென்ன விதிகள் இருக்கு? அங்க எப்படி வேலை செய்யணும்? நான் மட்டும் தான் போக முடியுமா அல்லது என் குடும்பத்துக்கும் அனுமதி உண்டா? – னு பல கேள்விகள் இங்க தோன்றலாம்.
விசா- ஒரு நாட்டுக்குள்ள நுழையறதுக்கான முக்கிய ஆவணம். பிரதான நுழைவுச் சீட்டுனு கூட சொல்லலாம்! அதுல பல வகைகள் இருக்கு. நாட்டை சுற்றிப்பார்க்க, உறவினர்களை சந்திக்க, வேலை செய்ய, தொழில் செய்ய-னு பல விதமான விசா-க்கள் உண்டு. குறிப்பிட்ட நாட்டின் சட்டப்படி அதன் விதிமுறைகள் மாறுபடும்.
சிங்கப்பூர் பொறுத்த வரை குறிப்பிட்ட நபரின் வேலை, சம்பளம் பொறுத்து மூன்று வகையான வேலை விசாக்கள் உண்டு.
அங்கு வேலை செய்திட “WORK PASS” என்ற ஆவணம் தான் மிக முக்கியம்! நாட்டின் எந்த மூலையிலும் அவர்களது அடையாளத்தை தெரிவிக்க இந்த Work Pass-ஐ பயன்படுத்தலாம்.
1.E-பாஸ் (E-Pass: Employment Pass)
2.S-பாஸ் (S-Pass: Short Term Employment Pass)
3.வொர்க் பெர்மிட் விசா (Work Permit)
1.E-பாஸ் (E-Pass: Employment Pass):
- மேனேஜர் மாதிரியான உயர்நிலை பதவி, 5000 SGD அல்லது அதற்க்கு மேல் ஊதியம் வாங்கக் கூடிய நபர்களுக்கு இந்த வகை விசா பொருந்தும்.
- இதற்கான கால அவகாசம் 2 வருடங்கள் அதற்க்கு மேல் ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் பொழுதும் 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
- இதற்கான கட்டணம் 105 SGD. இந்த வகை விசா கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தையும் அழைத்துச்செல்ல அனுமதி உண்டு.
2.S-பாஸ் (S-Pass: Short Term Employment Pass) :
- எம்பிளாய்மென்ட் பாஸ் விசா-விற்கு அடுத்தது தான் இந்த S-பாஸ் விசா. இரண்டாம் நிலை ஊழியர்களுக்கான இந்த பாஸ் குறுகிய கால வேலைகளுக்கும் வழங்கப்படுகிறது.
- 3150 SGD அல்லது அதற்க்கு அதிகமான ஊதியம் பெரும் நபர்களுக்கு இது பொருந்தும். இதற்கான கால அவகாசம் 2 வருடங்கள், புதுப்பிக்கும் பொழுது அடுத்த மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
- இதற்கான கட்டணம் 105 SGD. S-பாஸ் கொண்டவர்கள் மாத ஊதியம் 6000 SGD இருந்தால் மட்டுமே உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்ல அனுமதி உண்டு.
3.வொர்க் பெர்மிட் விசா (Work Permit):
- இதன் படி தொழிலார்கள் மட்டுமே தங்கி வேலை செய்ய அனுமதி உண்டு. இந்த வகை விசா குறிப்பிட்ட நபரின் வேலையை பொறுத்து மாறுபடும்.
- இதற்கான கட்டணம் 35 SGD.கட்டிட வேலை, அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வீட்டு வேலைகள், குழந்தைப் பராமரிப்பு போன்ற ஒவ்வொரு வேலைகளுக்கும் தனிப்பட்ட பெயர் கொண்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த மூன்று வகையான விசாக்கள் தான் வேலை காரணமாக சிங்கப்பூர் வருபவர்களுக்கு முக்கியமாக வழங்கப்படுகின்றன.
இந்த விசாக்களை நாம் எப்படி விண்ணப்பித்து பெற முடியும்? குடும்பங்களை அழைத்துச் செல்ல என்னென்ன விதிகள் உள்ளன?
- முதல் முறை வேலைக்கு செல்லும் பொழுது இந்த விசா-க்கள் வேலை கொடுக்கும் கம்பெனிகள் அல்லது ஏஜெண்ட்டுகள் மூலம் விண்ணப்பித்து வழங்கப்படும்.
- இதனை IPA (In-Principle Approval) என்று அழைப்பர். இதனைக் கொண்டு நீங்கள் சிங்கப்பூர் செல்ல இயலும்.
- குறிப்பிட்ட அந்த நபர் சிங்கப்பூர்-ல் இருந்தபடியே ஒரு கம்பெனியில் இருந்து மற்றொரு கம்பெனிக்கு மாறும்பொழுது, அந்த புதிய கம்பெனி தங்கள் சார்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
- இது தவிர E-பாஸ் மற்றும் S-பாஸ் விசா கொண்டவர்கள், சராசரியாக 6000 SGD (Singapore Dollar) அல்லது அதற்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் தங்கள் குடும்பங்களை அழைத்துச் செல்லலாம்.
- குறிப்பாக இந்த வருமானம் தனிப்பட்ட ஒருவருடைய மாத ஊதியமாக இருக்க வேண்டும் (குடும்பத்தின் மொத்த வருமானமாக இருக்கக் கூடாது).
- அவர் தனது மனைவி அல்லது கணவரையும், 21 வயதிற்கு கீழ் உள்ள தங்கள் குழந்தைகளையும் Dependant வகை விசா மூலம் அழைத்துச் செல்லலாம்.
- இதற்கான கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு 105 SGD ஆகும். இந்த விசா அவரது கம்பெனி மூலமாகவோ அல்லது வேலை பெற்றுத்தந்த ஏஜெண்ட் மூலமாகவோ விண்ணப்பிக்கப்படும்.
- ஒருவேளை அவர் தங்கள் பெற்றோரையோ அல்லது தங்கள் துணையின் பெற்றோரையோ அழைத்து வர விரும்பினால், Long Term Visit பாஸ் மூலம் அழைத்து வரலாம். இந்த வசதி E-பாஸ் விசா மற்றும் மாதம் 12000 SGD ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேற்கண்ட வேலை சார்ந்த விசாக்களை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
1.விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்
2.விசா பெறுவதற்கான விண்ணப்பம்
3.கம்பெனி மூலம் வழங்கப்படும் வேலை வாய்ப்பு படிவம்
4.விண்ணப்பதாரரின் கல்விச் சான்றிதழ்கள்
5.அனுபவச் சான்றிதழ்கள்
6.மருத்துவச் சான்றிதழ்
7.பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
(இது தவிர விசாவிற்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.)
குடும்ப உறுப்பினர்களுக்கு Dependant விசா பெறுவதற்கான, ஆவணங்கள்:
1.குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட்
2.திருமணச் சான்றிதழ்
3.குழந்தைகளுக்கு தாய் மற்றும் தந்தை பெயர் குறிப்பிடப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
4.சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர் பெயர் குறிப்பிடபட்ட தத்து ஆவணம்
மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு 3 முதல் 5 வாரத்திற்குள் விசா வழங்கப்படும்.
சிங்கப்பூர் செல்ல விரும்பும் நம் சொந்தங்கள் அனைவரும் இது போன்ற அடிப்படையான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும். நீங்க சிங்கப்பூர்-ல வேலை செய்ய போறிங்களா அல்லது வேலைக்கு விண்ணப்பம் போட்டு இருக்கீங்களா உங்களுக்கு இந்த பதிவு உதவியா இருக்கும்-னு நம்பறோம். நன்றி!