ஜி.எஸ்.டி வரி உயர்வால் தபால் சேவைக்கான கட்டணத்தை 2023 ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக சிங்கப்பூர் அரசின் தபால் துறையான சிங் போஸ்ட் அறிவித்திருக்கிறது.
சிங் போஸ்ட்
சிங்கப்பூர் அரசு துறையான சிங்கப்பூர் போஸ்ட் எனப்படும் சிங் போஸ்ட், தங்கள் சேவைக்கான கட்டணத்தை 2014-ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கவில்லை. இந்தநிலையில், ஜி.எஸ்.டி வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் சேவைக் கட்டணத்தை மாற்றியமைக்க இருப்பதாக சிங் போஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பு, வரி உயர்வு போன்ற காரணங்களால் சேவையாற்றுவதில் ஏற்படும் கூடுதல் செலவீனங்களை ஈடுகட்ட இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று சிங் போஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு கட்டண உயர்வு?
அடிப்படை தபால் சேவையான 20கி மற்றும் 40கி எடை கொண்ட தபால்களுக்கு உள்நாட்டு கட்டணமாக முறையே 30 மற்றும் 37 செண்ட்கள் இப்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இது முறையே 31 மற்றும் 38 செண்ட் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டணம் 2024 ஜனவரியில் 32 மற்றும் 39 செண்ட்களாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டிராக் செய்யும் தபால் சேவைகளான 2.55 மற்றும் 3.40 சிங் டாலர்கள் கட்டணமும் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த வகையில் 20கி மற்றும் 40கி எடைப் பிரிவு தபால்கள் சேவை கட்டணத்தில் 5 செண்ட்கள் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், 100கி, 250கி மற்றும் 500கி எடைகொண்ட தபால்கள் சேவைக் கட்டணமும் உயர்கிறது. பதிவுத் தபால்களுக்கான கட்டணமும் 2.24 சிங் டாலர்களில் இருந்து 2.27 சிங் டாலர்களாக உயர்த்தப்படும். சிங்கப்பூர் உள்நாட்டு ஸ்பீடு போஸ்ட் கட்டணமும் 6 சிங் டாலர்களில் இருந்து 2023 ஜனவரி முதல் தேதியில் 6.10 சிங் டாலர்களாகவும், 2024 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 6.20 சிங் டாலர்களாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.