TamilSaaga

துபாயில் நடந்த கொடூரம்:  வாளால் வெட்டி இரு இந்தியர்கள் படுகொலை!! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…

துபாய், ஏப்ரல் 16, 2025: தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்டபு பிரேம்சாகர் (35) மற்றும் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி எல்எல்சி என்ற கடையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களுடன் அதே கடையில் பணியாற்றிய நிஜாமாபாதைச் சேர்ந்த சாகர் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபரும் இருந்தனர்.
இந்நிலையில், இந்தியர்களுக்கும் பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோசமடைந்தது. ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வாலிபர், வாளால் மூன்று இந்தியர்களையும் சரமாரியாக வெட்டியதில் அஷ்டபு பிரேம்சாகரும், ஸ்ரீனிவாஸும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாகர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உறவினர்கள் அதிர்ச்சி: மத்திய அரசுக்கு கோரிக்கை:
இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்தார். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை சந்தித்துவிட்டு திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் உறுதி:
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்தார். வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசியதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதுடன், உடல்களை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய்சங்கர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த கொலைச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பிரேம்சாகரின் சகோதரர் அஷ்டபு சந்தீப்புடன் பேசி, உடலை தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துபாயில் உள்ள இந்திய தூதரகம் மூலம், துபாய் காவல்துறையுடன் இணைந்து இந்த நடைமுறைகளை விரைவாக முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கை:
“வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி. பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இந்த துயரமான நேரத்தில் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்போம்,” என பண்டி சஞ்சய் தெரிவித்தார்.
இந்த கொடூரமான சம்பவம் ஏப்ரல் 11 அன்று பணி நேரத்தில் நடந்ததாகவும், தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய் காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related posts