நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அந்நாட்டு விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பொக்காராவிலிருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு தாரா ஏர் 9 NAET இரட்டை எஞ்சின் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதனுடனான தொடர்பை இழக்க நேரிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9:55 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. “விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வான் பகுதியில், காணப்பட்டுள்ளது.
விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் இருந்தனர் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் நேபாள குடிமக்கள் என்று கூறப்படுகிறது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 22 பயணிகள் இருந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி “திட்டி” பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. “திட்டி பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதோ அசாதாரண சத்தம் கேட்டதாக எங்களுக்குத் தெரிவித்தனர் என்று அதிகாரிகள் கூறினார்.
“இப்பொது தேடுதல் நடவடிக்கைக்காக ஹெலிகாப்டரை அப்பகுதிக்கு அனுப்புகிறோம்,” என்று முஸ்டாங்கின் மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் DSP ராம் குமார் டானி ஊடகங்களிடம் தெரிவித்தார்.