சென்னை, மே 25: துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்க வந்தபோது அதன் மீது திடீரென பச்சை நிற லேசர் ஒளி பாய்ந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. எனினும், விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு, விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதால், 325 பயணிகளும் பாதுகாப்பாகக் கரைசேர்ந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொடிப்பொழுதில் நிகழ்ந்த பதற்றம்:
நேற்று இரவு துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்தை நோக்கி வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்காகத் தனது உயரத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. விமானம் தாழ்வாகப் பறந்தபோது, பரங்கிமலைப் பகுதியிலிருந்து சக்திவாய்ந்த பச்சை நிற லேசர் ஒளி ஒன்று விமானத்தின் மீது வேகமாகப் பாய்ந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத விமானி சில நொடிகள் நிலை குலைந்தாலும், உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு, விமானத்தை மீண்டும் உயர்த்திப் பறக்கவிட்டார்.
கட்டுப்பாட்டு அறைக்கு அவசரத் தகவல்:
உடனே விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, லேசர் ஒளி விமானத்தின் மீது பீச்சி அடிக்கப்படுவதால் தரையிறங்க முடியவில்லை என்று புகார் தெரிவித்தார். இந்தத் தகவல் உடனடியாக விமானப் பாதுகாப்புப் பிரிவினருக்கும் (Bureau of Civil Aviation Security) மற்றும் சென்னை விமான நிலைய போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. லேசர் ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்குள் அந்த ஒளி நின்றுவிட்டது.
புது E-பாஸ்போர்ட் வந்துருச்சு! உங்க பாஸ்போர்ட் நிலவரம் என்ன? அப்ளை செய்வது எப்படி?
பத்திரமான தரையிறக்கம், தொடரும் விசாரணை:
லேசர் ஒளி மறைந்த பின்னர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு வந்த விமானங்களும் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தரையிறங்கின. லேசர் ஒளி சில நொடிகள் மட்டுமே நீடித்தாலும், இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியும் பரபரப்பும் விமான நிலையத்தைச் சூழ்ந்துகொண்டன.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முன்னரும் நடந்த சம்பவங்கள் – தொடரும் எச்சரிக்கை:
விமானங்கள் மீது லேசர் ஒளி அடிப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இதுகுறித்து ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுத்ததோடு, விமானப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோர் குறித்துத் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது.
அந்த வகையில், முன்னதாக விமானம் மீது லேசர் அடித்த வட மாநிலக் கட்டிடத் தொழிலாளர்கள் மூவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் விளையாட்டாக லேசர் அடித்ததாகக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இப்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதேபோன்ற சம்பவம் சென்னையில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.