TamilSaaga

துணிவு மூன்றாவது சிங்கிள்… இணையத்தினை ஆக்கிரமித்த ஷபிர்… சிங்கை ரியாலிட்டி ஷோவில் கெத்து காட்டி ஹிட் அடித்தவர்… ரசிகர்களின் செல்ல பிள்ளை… யார் இந்த ஷபிர்?

தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் கருடா சிங்கிளை பாடிய பாடகர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டின் கிங் மேக்கராக இருக்கும் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் தை பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து அஜித்குமாரின் துணிவு படத்துடன் விஜய் நடித்த வாரிசு படம் மோத இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த நிகழ்விற்கு காத்திருக்கிறார்கள்.

வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய ஹெச். வினோத் தான் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார். பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தான் அஜித்தின் இந்த படத்தினையும் தயாரித்து இருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளடா’ ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் விஜயின் ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்து தற்போதைய வைரல் பாடல்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து தற்போது கேங்ஸ்டா என்னும் மூன்றாவது சிங்கிள் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடியவர் ஷபிர் என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டி இருக்கிறார். ஷபிர் சிங்கப்பூரில் மிகவும் புகழ்பெற்ற இசை கலைஞர். அவரின் நிறைய ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாது ஷபிர் சிங்கப்பூரில் பிறந்தவர் என்றாலும் அவரின் தந்தை தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்தவர். இதனால் ஷபிர் சிறுவயதில் இருந்தே தமிழின் மீது அதிக ஆர்வமுடன் இருந்து வந்திருக்கிறார்.

தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடிய ஷபிர் சமீபத்தில் திரைக்கு வந்த அருண் விஜயின் சினம் படத்திற்கு இசையமைத்திருந்தார். சிங்கப்பூரில் தமிழ் பேசும் மக்களிடம் பிரபலமாக இருக்கும் சிங்கை நாடு பாடலை இசையமைத்தது ஷபிர் தான். சிங்கப்பூரில் தேசிய தினத்திற்காக ஏற்கனவே இருக்கும் முன்னேறு வாலிபா பாடலைப் போல இந்த பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

2012ம் ஆண்டு தனது குழுவுடன் அவர் இயற்றிய சிங்கை நாடு பாடலை 2021ம் ஆண்டு National Day Paradeல் லைவ்வாக பாடி பாராட்டுக்களை பெற்றார். சிங்கப்பூர் அரசாங்கத்தால் இளம் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருதான சிங்கப்பூர் இளைஞர் விருது ஷபீருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் தமிழ் வம்சாவளி கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராக்ஸ்கூல் UK உடன் இணைந்து சிங்கப்பூரில் ஷபீர் மியூசிக் அகாடமியினை நடத்தி வரும் ஷபீர் தான் சிங்கப்பூருக்கு வைல்ட் கார்டு என்ற வார்த்தையை அறிமுகம் செய்து வைத்தவர். 2005 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஷபீர் கலந்து கொண்டார். ஆனால் அவரை இறுதிப்போட்டிக்கு முன்னர் நடுவர்கள் குறை கூறி வெளியேற்றினர்.

இதனால் கடுப்பான ஷபீரின் ரசிகர்கள் ஒரு கையெழுத்து இயக்கத்தினை நடத்தினர். இதனால் அதிர்ந்த அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் சிங்கப்பூரில் முதல்முறையாக வைல்டு கார்டு எண்ட்ரியை அறிமுகப்படுத்தினர். அதில் ரீ எண்ட்ரி கொடுத்த ஷபீர் இறுதியில் பட்டத்தினை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை திறமை இருக்கும் ஷபீரின் பாடலுக்கு வெயிட்டிங் தானே!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts