சிவகார்த்திகேயனின் “SK 20” திரைப்படத்தில், உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நடிகை மரியா, சிவகார்த்திகேயன் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் போர் சமயத்தில், ரஷ்யாவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள். சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர். இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே பங்குகொண்டு நடித்து வருகிறார்.
இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார், நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, அருண் விஷ்வா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையுலகில் இணையும் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய பகுதிகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியின் கவர்ச்சிகரமான இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.
இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். தமன் தொடர்ந்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கி வருவதால், சிவகார்த்திகேயனுடன் அவரது கூட்டணி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.