இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் 90களில் முன்னையில் இருந்த நாயகிகள் இன்றளவும் தங்களது ஆளுமையை அளித்து வருகின்றனர் என்றால் அதுமிகையல்ல. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 90களின் நடுப்பகுதியில் அறிமுகமான ஒரு நாயகி சுமார் 30 ஆண்டுகள் தாண்டியும் இன்றளவும் நடிப்புலகில் அசத்தி வருகின்றார். தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படத்திலும் அவர் தற்போது நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அசத்தலான நடிகை வேறு யாருமில்லை, நம்ம தேவயானி தான். 1993ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் தான் இவர் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஒருசில படங்களில் நடிக தொடங்கினார் தேவயானி. இதனையடுத்து 1995ம் ஆண்டு ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக்காக தமிழில் கார்த்திக், ரகுவரன் நடித்து வெளியான “தொட்டாசிணுங்கி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து “கல்லூரி வாசல்” என்ற படத்தில் அஜித் மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானிக்கு பிரேக் கொடுத்த படம் தான் 1996ம் ஆண்டு வெளியான “காதல்கோட்டை”. “நீ இங்கு சுகமே..நான் அங்கு சுகமா..” என்ற பாடல் வரிகள் இன்றளவும் நமது காதுகளில் ஒலிக்கின்றது என்றால் அது சற்றும் மிகையல்ல. காதல்கோட்டை படத்தில் கமலி என்ற கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. அந்த படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில விருது அவருக்கு வழங்கப்பட்டது.
2003ம் ஆண்டுக்கு பிறகு சீரியல்களில் நடித்து வந்தாலும் இன்றளவும் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகின்றார். தேவயானி 2001ம் ஆண்டு பிரபல இயக்குநர் ராஜகுமாரன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜகுமாரன் இயக்கிய 5 படங்களிலும் தேவயானி நடித்துள்ளார் என்பதே அவர்களின் காதலுக்கு சாட்சி. இந்நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் தற்போது விவசாயத்தில் அசத்தி வருகின்றனர்.
ராஜகுமாரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் என்ற கிராமம் தான் சொந்த ஊர். அங்கு அண்மையில் 2 ஏக்கர் விவசாய நிலத்தை பிளாட் போட்டு ஒருவர் விற்ற நிலையில் அதை தேவயானி வாங்கியுள்ளார். தற்போது அந்த 2 ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி பயிரிட்டு வளர்த்து வருகின்றார். கிராமங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறும் இந்த நிலையில் நடிகை தேவயானியின் இந்த செயல் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகின்றார்.