சிங்கப்பூரில் வேலை செய்யும் உங்களின் சேமிப்பை இன்னும் பெரியதாக மாற்ற விரும்புகிறீர்களா?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டமான “ஹர் கர் லக்பதி” உங்களுக்கான திட்டம் தான்!
RD என்றால் என்ன?
ரெக்கரிங் டெபாசிட் என்பது ஒரு வகையான சேமிப்புத் திட்டமாகும். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்திற்கு வங்கியில் செலுத்த வேண்டும். இந்தத் தொகை மீது வங்கி உங்களுக்கு வட்டி வழங்கும்.
ஹர் கர் லக்பதி திட்டம் ஏன் சிறப்பு?
- எளிதான சேமிப்பு: ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை செலுத்துவதன் மூலம் நீங்கள் பெரிய தொகையை சேமிக்கலாம்.
- உறுதியான வருமானம்: வங்கி வழங்கும் வட்டியின் மூலம் உங்கள் சேமிப்பு தொகை தொடர்ந்து வளரும்.
- நெகிழ்வான கால அளவு: உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் கால அளவைத் தேர்வு செய்யலாம்.
- பாதுகாப்பான முதலீடு: வங்கி சேமிப்பு என்பதால் இது மிகவும் பாதுகாப்பான முதலீடாகும்.
லக்பதி RD திட்டத்தில் முதலீடு செய்யலாம்: யார் யார்?
இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த வயதில் இருந்தாலும், எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோரின் அனுமதியுடன் தாங்களாகவே இந்த திட்டத்தில் முதலீடு செய்து, தங்கள் கணக்கை நிர்வகிக்கலாம். 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் இந்த வயது குழந்தைகளுக்கான கணக்கை அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் தொடங்கி நிர்வகிக்க வேண்டும்.
முதலீட்டு காலம்: இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் கால அளவைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
முன்கூட்டியே கணக்கை மூடுவதற்கான அபராதம்:
- ரூ.5 லட்சத்துக்கு குறைவான தொகை: நீங்கள் தேர்ந்தெடுத்த காலம் முடிவதற்கு முன்பே கணக்கை மூடினால், உங்கள் டெபாசிட் தொகை ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், 0.50 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்.
- ரூ.5 லட்சத்துக்கு அதிகமான தொகை: உங்கள் டெபாசிட் தொகை ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், 1 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்.
- 7 நாட்களுக்குள் மூடுதல்: கணக்கைத் தொடங்கி 7 நாட்களுக்குள் மூடும் பட்சத்தில், எந்த வித வட்டியும் செலுத்தப்படாமல் அபராதம் பிடித்தம் செய்யப்படும்.
லக்பதி RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் தவணை தொகையை செலுத்த வேண்டும். தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், வங்கி சில அபராதத் தொகையை விதிக்கும். 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான RD திட்டங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய்க்கு ரூ.1.50 காசுகள் அபராதம் விதிக்கப்படும். 5 ஆண்டுக்கு மேல் முதிர்வு காலம் கொண்ட RD திட்டங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் தொகைக்கு ரூ.2 அபராதம் விதிக்கப்படும்.
நீங்கள் மாதம் 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தால், ஒரு மாதம் தாமதமாக செலுத்தினால், 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கான திட்டத்தில் ரூ.15 அபராதமும், 5 ஆண்டுக்கு மேல் முதிர்வு காலம் கொண்ட திட்டத்தில் ரூ.20 அபராதமும் செலுத்த வேண்டும்.
ஹர் கர் லக்பதி திட்டத்தின் முதலீட்டு காலம் 3 முதல் 10 ஆண்டுகள் வரை. பொதுமக்கள்: 3 மற்றும் 4 ஆண்டு RD திட்டங்களுக்கான வட்டி விகிதம் 6.75%. மூத்த குடிமக்கள்: அதே திட்டத்திற்கு 7.25% அதிக வட்டி.
வெறும் 4% வட்டியில் 3 லட்சம் கடன்! அப்ளை செய்வது எப்படி?
இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் வருமானம் பெற நீங்கள் எவ்வளவு மற்றும் எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான படம் இதோ:
வயது மற்றும் முதலீட்டு காலத்தைப் பொறுத்து மாறுபடும்:
பொது வாடிக்கையாளர்கள்:
- 3 ஆண்டுகள்: மாதம் ரூ.2,500 முதலீடு செய்தால், 6.75% வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் ரூ.1 லட்சம் பெறலாம்.
- 4 ஆண்டுகள்: மாதம் ரூ.1,810 முதலீடு செய்தால், 6.75% வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் ரூ.1 லட்சம் பெறலாம்.
- 5 ஆண்டுகள்: மாதம் ரூ.1,407 முதலீடு செய்தால், 6.50% வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் ரூ.1 லட்சம் பெறலாம்.
மூத்த குடிமக்கள்:
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.25% என்பதால், பொது வாடிக்கையாளர்களை விட குறைவான தொகையை முதலீடு செய்து, குறைந்த காலத்தில் ரூ.1 லட்சம் பெறலாம். உதாரணமாக, 3 ஆண்டுகளில் ரூ.2,480 மாதா மாதம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 லட்சம் பெறலாம்.
இதற்கு நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் SBI வங்கியை உடனே அணுகவும்.